Semmozhi Park Flower Show: சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி.. எத்தனை நாட்களுக்கு? பார்வையாளர்கள் நேரம்? முழு விவரம்..
சென்னையில் நாளை முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
சென்னையில் நாளை முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
கோடைக்காலம் என்றாலே ஊட்டி, கொடைக்காணல், ஏற்காடு ஆகிய மலை பிரதேசங்களில் மலர் கண்காட்சி தொடங்கும். இந்த மலர் கண்காட்சியை பார்த்து ரசிக்க ஏரளமான மக்கள் பயணம் மேற்கொள்வர். நாளை கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. நூற்றாண்டு விழாவை ஓராண்டு காலம் கொண்டாட தமிழ்நாடு அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் கலைஞரின் சாதனை விளக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக சிறப்பு குழு அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். மதுரையில் கலைஞர் நூலகம், சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நாளை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கப்படுகிறது.
செம்மொழி பூங்கா 2010 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் ஏரளாமான மரங்கள், செடிகள், கொடிகள், 500 க்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளது. செம்மொழி பூங்கா நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்தாலும், பூங்காவிற்கும் பசுமை பூத்துக் குளுங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கும் மலர் கண்காட்சிக்காக பெங்களூர், உதகை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு இந்த கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம் எனவும் தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ரூபாய் 20 கட்டணமாகவும், பெரியவர்களுக்கு ரூபாய் 50 நுழைவு கட்டணமாகவும் வசூலிக்கப்படும், கேமராவுக்கு ரூ.50 ரூபாயும், வீடியோ எடுக்க ரூ.100 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் முறையாக மலர் கண்காட்சி கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த ஆண்டு செம்மொழி பூங்காவில் நடத்தப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும் நிலையில் மலர்கள் வாடினாலும் அதனை மாற்றி புதிய மலர்களை வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் காரணமாக ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்பட இருந்த பள்ளிகள் ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதால் மலர் கண்காட்சியை காண ஏராளமான மாணவ மாணவிகளும் பொதுமக்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.