12 Hour Labour Law: 12 மணி நேர வேலை: தொழிற்சங்களுடன் இன்று ஆலோசனை.. கைவிடப்படுமா இந்த மசோதா?
12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் தமிழக அரசு சார்பில் இன்று மதியம் 3 மணிக்கு ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் தமிழக அரசு சார்பில் இன்று மதியம் 3 மணிக்கு ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
சட்டப்பேரவையின் கடைசி நாளன்று (ஏப்ரல் 21 ஆம் தேதி) 12 மணி நேர வேலை மசோதாவை தாக்கல் செய்தனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை சட்டம் அமலில் உள்ள நிலையில் இந்த சட்ட மசோதா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் முதல் முறையாக அரசின் கூட்டணி கட்சிகளான வி.சி.க, மார்ச்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக ஆகிய அனைவரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பா.ஜ.க மற்றும் பா.ம.க தரப்பிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தொழிலாளர் நலத்துறை சட்ட முன்வடிவு குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று மதியம் 3 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதுதொடர்பான அறிக்கையில் “கடந்த வெள்ளிக்கிழமை (21-4-2023) அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)" தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டமுன்வடிவினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டத்திலிருந்த தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருக்கும் இந்தச் சட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறி, இந்தத் திருத்தத்தால் தமிழ்நாட்டில் கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும், சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களும், தொழில் துறை அமைச்சரும் விரிவாக விளக்கம் அளித்தார்கள். இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களைத் தெரிவித்து வருவதால் வரும் 24-4-2023 (திங்கள்கிழமை) அன்று மதியம் 3-00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் நடத்தப்படவுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ வேலு, தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இந்த 12 மணி நேர வேலை சட்டத்தின்படி அனைவரும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது கிடையாது. தொழிலாளர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிறுவனங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியும். மேலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும், 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை இருக்கும். ஆனால் இது அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.