Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர் வேனில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊர் திரும்பியபோது மரத்தின் மீது மோதி விபத்து.

கள்ளக்குறிச்சி : ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர் வேனில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் அதிகாலை திருச்சி - சென்னை GST சாலையில் சென்று கொண்டிருந்தது.
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மேட்டத்தூர் அருகே வந்த போது வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் இடதுபுறம் இருந்த மரத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஞ்சியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மரத்தில் சிக்கி கொண்டிருந்த வாகனத்தின் முகப்பு பகுதியை நவீன இயந்திரம் கொண்டு உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தற்போது படுகாயம் அடைந்த 13 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனத்தை அகற்றி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா வேன் விபத்தில் சிக்கிய இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி நேரில் வந்து பார்வையிட்டார். இதற்கிடையில் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை ஓட்டியிருக்கலாம் என்றும், அதன் காரணமாக பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உளுந்தூர்பேட்டை அருகே அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த விபத்து சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





















