Helmet: காரில் சென்றாலும் ஹெல்மெட் போடணுமா...? 54 முறை வழக்குப்பதிவு: அபராதம் விதித்ததால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டி
சென்னையில் காரில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் போடவில்லை எனக் கூறி 54 முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் காரில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் போடவில்லை எனக் கூறி 54 முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவருக்கு போக்குவரத்துக் காவல் துறை தரப்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி காலை வேப்பேரி பகுதியில் காரில் சென்றுள்ளார் சஞ்சய் குமார்.
சலானில் கார் என பதிவு செய்துவிட்டு பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியவில்லை என 54 முறை வழக்குப் பதிவு செய்து போக்குவரத்துத் துறை சார்பில் சலான் அனுப்பப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமல்படுத்துவதற்கு முன்பாக போடப்பட்ட வழக்கு என்பதால், 5,400 ரூபாய் அபராதம் செலுத்துமாறு சலான் அனுப்பியதால் உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இருசக்கர, மூன்று சக்கர வாகனத்தில் பயணி குறிப்பிடும் இடத்திற்கு ஏற்றி செல்ல மறுத்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
புதிய விதிகளின்படி அபராதம் எவ்வளவு..?
- போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ. 500, 2ம் முறை ரூ. 1500 அபராதம் விதிக்கப்படும்.
- பொது இடங்களில் வாகனங்களை ஆபத்தான முறையில் நிறுத்திவிட்டு சென்றால் முதல்முறை ரூ.500, 2வது முறையாக அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும்.
- மக்களை அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தான முறையிலும் வாகனத்தை ஓட்டுபவருக்கு முதல்முறை ரூ. 1,000, 2வது முறை ரூ.10,000 மும் வசூலிக்கப்படும்.
- ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.500, 2வது முறையாக ரூ.1500 அபராதம் விதிக்கப்படும்.
- கார்கள், ஜீப்புகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக ஓட்டினால் ரூ. 2000, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் அமர்ந்து பயணிப்பவருக்கும் ரூ. 10,000 வரை விதிக்கப்படும்.
- சாலையில் தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தம் எழுப்பினால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.
- ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
- தீயணைப்பு வண்டி வாகனங்களுக்கும் வழிவிட மறுத்தாலும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
- சாலையில் தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தம் எழுப்பினால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்
- அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
- ரிஜிஸ்டிரேஷன் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், காரில் பின்னிருக்கையில் அமர்ந்து சென்றவர் ஹெல்மட் அணியவில்லை என்று கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மட் போடாமல் போனா அபராதம் 1000. ஒரு ஹெல்மட் விலையே 1000 தான். அபராதத்துக்கு பதிலா.. ஹெல்மட்டையே கொடுத்திடலாமே என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். ஹெல்மட் கொடுத்தாலும் போட வேண்டும் இல்லையா என்று மற்றொரு தரப்பும் விவாதத்தில் இறங்கியது.