School Leave: மக்களே... இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ள்தாக, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை:
கனமழை காரணமாக தஞ்சையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருவாரூரில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, புதுச்சேரியை சேர்ந்த காரைக்காலிலும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.
வலுவிழக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இலங்கை-திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவி வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் அது மேலும் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Depression over south Sri Lanka moved SW wards during past 06 hours and weakened into WML over Comorin and adj Gulf of Mannar and west coast of Sri Lanka at 2330 IST of 02 Feb. Very likely to move SW wards and weaken gradually into LPA during next 12 hrs. pic.twitter.com/2hl2DKB0ns
— India Meteorological Department (@Indiametdept) February 2, 2023
கனமழைக்கு வாய்ப்பு:
இதன் காரணமாக, இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
04.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
05.02.2023 & 06.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
03.02.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04.02.2023: குமரிக்கடல் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.