சொந்த ஊரில் தீபாவளி: இதுவரை 30 ஆயிரம் வரை முன் பதிவு... அரசு பேருந்திற்கு அடிபிடி!
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவ.4-ம் தேதி (வியாழக் கிழமை) வருகிறது. வெள்ளி ஒரு நாள் விடுப்பு எடுத்தால், சனி, ஞாயிறு எனத் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும்.
தீபாவளிப் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல இதுவரை 30,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவ.4-ம் தேதி (வியாழக் கிழமை) வருகிறது. வெள்ளி ஒரு நாள் விடுப்பு எடுத்தால், சனி, ஞாயிறு எனத் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும்.
இந்த லீவ் கேல்குலேஷனை சரியாகப் போட்ட சென்னை வாழ் வெளியூர்மக்கள் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில் சிறப்பு ரயில் அறிவிப்பு எப்போது வரும் என்று காத்திருக்க முடியாதவர்களுக்கு அரசுப் பேருந்துதான் சீப் அண்ட் பெஸ்ட் பயணம். இதுவரை, அரசுப் பேருந்துகளின் வாயிலாக சொந்த ஊர் செல்ல 30,000க்கும் அதிகமானோர் டிகெட் முன்பதிவு செய்துள்ளனராம்.
எப்படி முன்பதிவு செய்வது?
அரசு விரைவுப் பேருந்துகளில், ஏசி பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் https://www.tnstc.in/ என்ற இணையதளம், டிஎன்எஸ்டிசி செயலி உள்ளிட்ட அரசு செயலி மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதுதவிர பேருந்து பயணத்துக்கென இருக்கும் ரெட் பஸ், டிக்கெட் கூஸ் போன்ற தனியார் புக்கிங் இணையதளங்கள் வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். சென்னையில் உள்ளோர் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
அதேபோல் அந்தந்த மாவட்டங்களிலும் நேரடியாக பேருந்து நிலையங்களிலேயே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் நின்று டிக்கெட் புக் செய்ய அச்சம் கொண்டோர் ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம்.
தற்போது வரை 1,100 பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த இடங்கள் நிரம்பியவுடன் கூடுதலான பஸ்கள் முன்பதிவுக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு..
தீபாவளிப் பண்டிகைக்கு பயணப்பட்ட இன்னும் ஒருவாரம் தான் இருக்கிறது. இதனால், இந்த வாரம் டிக்கெட் முன்பதிவு இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நேர பரபரப்பை எதிர்கொள்ள போக்குவரத்துக் கழகமும் தயாராக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தீபாவளிக்காக 16540 சிறப்புப் பேருந்துகளை அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து மட்டும் தென் மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களுக்கும் மொத்தம் 9.806 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 6,734 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
தீபாவளி முடிந்த பின்னர், நவம்பர் 5 முதல் 8 ஆம் தேதி வரை சென்னைக்கு தினமும் 2,100 பேருந்துகளுடன் 4,319 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் 5000 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 17,719 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.