MK Stalin: விரைவில் 3000 புதிய காவலர்கள் தேர்வு - பேரவையில் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அதில், “இந்தியாவிலேயே அமைதியான மற்றும் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.
இதன்காரணமாக தமிழ்நாட்டில் நல்ல அளவில் முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. லாக் அப் மரணங்களை எந்த ஆட்சியாக இருந்தாலும் நியாயப்படுத்த முடியாது. அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக நடைபெறும் குற்றங்களை வைத்து ஒட்டு மொத்த காவல்துறை மீதும் புகார் தெரிவிக்க கூடாது. தமிழ்நாட்டில் விரைவில் புதிதான 3000 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். திமுக ஆட்சியில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது திமுக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்காரணமாக அனைவருக்கும் நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் பயன்பாட்டை தடுக்க காவல்துறை தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மதுவிலக்கு பிரிவு மறுசீரமைப்பு செய்யப்படும்.
அத்துடன் சென்னையில் 3 மண்டலங்களில் போக்குவரத்து கண்காணிப்பு மண்டலங்கள் அமைக்கப்படும். காவலர்களுக்கு இடர்படி தொகை உயர்த்தி வழங்கப்படும். காவல் ஆய்வாளர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ30 லட்சத்திலிருந்து 60 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சமூக ஊடகங்களை கண்காணிக்க ஊடக மையம் அமைக்கப்படும். திருவாரூரின் முத்துப்பேட்டையில் 12 கோடி ரூபாய் செலவில் புதிய பயிற்சி இல்லம் கட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:‛சாப்பாடா... இது? வாய்ல வைக்க முடியல...’ துணைவேந்தர் வீட்டில் விடிய விடிய தர்ணா நடத்திய பல்கலை மாணவிகள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்