Accident:சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: 3 பேர் பலி
கண்டெய்னர் லாரி ஓட்டுநர் திருநெல்வேலியைச் சேர்ந்த பேச்சுமுத்து பாண்டியன் பலத்த காயங்களுடன் வாழப்பாடி அரசு மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து வாழப்பாடிக்கு மின்சாதன பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே புதுப்பாளையம் பகுதியில் சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்த போது முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் திருநெல்வேலியைச் சேர்ந்த பேச்சுமுத்து பாண்டியன் பலத்த காயமடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வாழப்பாடி காவல் துறையினர் விபத்தில் சிக்கி காயமடைந்த கண்டெய்னர் ஓட்டுநர் பேச்சிமுத்து பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் சடலங்கள் வாகனத்தில் சிக்கி உள்ளதால் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு மீட்ட வாழப்பாடி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.