மத்திய ஓபிசி பட்டியலில் விடுபட்ட தமிழ்நாடு சாதிப் பெயர்களை சேர்க்க வேண்டும் - விசிக கோரிக்கை
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 சாதிகளை, மத்திய ஒபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என விழுப்புரம் எம்.பி ரவிகுமார் கோரிக்கை வைத்தார்
தமிழகத்தைச் சேர்ந்த பல சாதிப் பெயர்களை, மத்திய இதரபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு பட்டியலில் சேர்க்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளாவன் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், "இந்திய ஒபிசி பட்டியலில் தமிழகத்தைச் சார்ந்த ஆயிர வைசியர்,சேர்வை போன்ற பல சாதிப் பெயர்கள் இடம்பெறவில்லை. இது குறித்து ஆய்வுசெய்து விடுபட்டுள்ள சாதிப் பெயர்களைக் கண்டறிந்து அவற்றை ஓபிசி பட்டியலில் இணைக்க வேண்டும். இதுதொடர்பான மனுவை, ரவிகுமார் எம்.பி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் கொடுத்தார்" என்று பதிவிட்டார்.
பட்டியல் கண்ட சாதியினருக்கும், பட்டியல் கண்ட பழங்குடியினருக்கும், இதர பிற்படுத்த வகுப்பினருக்கும் (ஓபிசி) இந்தியாவில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஒபிசி இடஒதுக்கீடைப் பொருத்த வரை, மத்திய அரசு பணி மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மத்திய பட்டியலும், மாநில அரசு பணி மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாநிலப் பட்டியலும் நிர்வகிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே சாதிகளை அடிப்படையாகக் கொண்டு தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தீர்மானிக்கின்றன. இருப்பினும், ஒரு மாநிலத்தில் ஒபிசி பிரிவில் உள்ள நபர், மத்திய அரசின் இடஒதுக்கீடுப் பிரிவில் சேர்க்கப்படாமல் உள்ளன.
முன்னதாக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 சாதிகளை, மத்திய ஒபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை வைத்தார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான தேசிய ஆணையம்:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான தேசிய ஆணையம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தான், பிரிவினர் எவரையும் மத்திய அரசு பட்டியலில் சேர்க்க முடியும். குடிமக்களின் பிரிவினர் எவரையும் பட்டியலில் ஒரு பிற்பட்ட வகுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான கோரிக்கையினை ஆராய்வது ஆணையத்தின் முக்கிய பணியாகும். மேலும், அத்தகைய பட்டியல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எவரும் மிகுதியாக சேர்க்கப்பட்டுள்ளனர் அல்லது குறைவாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த முறையீடுகளையும் ஆணையம் கேட்டு பெறும்.
மத்திய ஒபிசி பட்டியலில் இடம்பெறாத தமிழகத்தைச் சேர்ந்த 30 சாதிகள், பல ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான தேசிய ஆணையத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2018 ம் ஆண்டு, பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்திற்கு” அரசியல் சட்ட தகுதி அளிக்கும் 102 வது அரசியல் சட்ட திருத்தத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இச்சட்ட திருத்தத்தில் 342A என்ற புதிய பிரிவை உருவாக்கி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை குடியரசுத் தலைவர் அறிவிப்பார் என்றும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பது, இருக்கின்ற சாதிகளை நீக்குவது போன்ற அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உட்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநிலங்கள் தயாரிக்கும் பட்டியலுக்கு இது பொருந்தாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டது.
Lambda variant: உலகை அச்சுறுத்தும் ‛லாம்ப்டா’ தொற்று: விஞ்ஞானிகளே குழம்பி நிற்க காரணம் என்ன?
இதற்கிடையே, மராத்திய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்," சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் மாற்றங்கள் செய்ய, குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக .மத்திய அரசின் பரிந்துரையில் புள்ளிவிவரங்கள் அடிப்படையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின்படிதான் குடியரசுத் தலைவர் மாற்றங்களைச் செய்வார்; மாநிலங்கள் ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர். மாநிலங்கள் தயாரிக்கும் பட்டியலுக்கும் இது பொருந்தும்" என்று தெரிவித்தனர்.