Madurai Chithirai Festival: சித்திரை திருவிழா - வைகையாற்றில் கூட்ட நெரிசல் - 2 பேர் உயிரிழப்பு
மதுரை சித்திரை திருவிழாவில் இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் 14ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிலையில் இந்த நிகழ்வை காண பல்லாயிர கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வைகை ஆற்றில் நெரிசலில் சிக்கியுள்ளவர்கள் காணமல் போனால் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் 9498042434 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Tamil Nadu: A huge crowd of devotees witness the entry of Lord Kallazhagar into the Vaigai River, for the unity & amity of the Saiva-Vaishnava, as part of the #MaduraiChithiraiFestival2022 festival, in Madurai pic.twitter.com/9zDL92LaOD
— ANI (@ANI) April 16, 2022
முன்னதாக இன்று காலை பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் பக்தர்களின் கரகோஷத்துடன் வைகை ஆற்றில் இறங்கினார். இதை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து இருந்தனர். பச்சை பட்டுடுத்தி வந்த கள்ளழகரை வெள்ளிக்குதிரையில் வந்து வீரராகவ பெருமாள் வரவேற்றார். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் நாச்சியார் அளித்த மாலையை அணிந்து கொண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் இந்த நிகழ்வு நடைபெற்று வந்தது. இந்தச் சூழலில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள காரணத்தால் இந்தாண்டு திருவிழாவை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இந்த நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் குவிந்தனர்.
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை பார்க்க வரும் பக்தர்களுக்கு ஏதுவாக சுமார் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்விற்காக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று அதிகாலை முதலே சுமார் 10 லட்சம் பக்தர்கள் குவிந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மதுரையில் இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்