ORGAN DONATION: உயிரிழந்தும் இரண்டு உயிர்களை காப்பாற்றிய ஒன்றரை வயது குழந்தை.. தமிழ்நாட்டில் மருத்துவர்கள் சாதனை!
ஒன்றரை வயது குழந்தையிடம் இருந்து பெறப்பட்ட உடல் உறுப்புகள் இரண்டு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.
உடல் உறுப்பு தானம்:
தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகள் காரணமாக, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அதோடு, மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்வதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டரை வயது குழந்தையின் உறுப்புகள் தானம் பெறப்பட்டதே, இதுவரை தமிழகத்தில் மிக குறைந்த வயது நபரிடம் இருந்து பெறப்பட்ட உறுப்பு கொடையாக இருந்தது. இந்நிலையில் தான், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையிடம் இருந்து பெறப்பட்ட உறுப்புகள், தமிழகத்தில் இரண்டு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.
படுகாயம் அடைந்த 1.5 வயது குழந்தை:
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில், குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர் உடனடியாக குழந்தையை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆரம்பகட்ட சிகிச்சையை அளித்த மருத்துவர்கள், குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என கூறி, சென்னைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.
குழந்தை உடல் உறுப்புகள் தானம்:
தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 2-ம் தேதி சென்னை ராஜீவ்காதி அரசு பொது மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு வரப்பட்டது. உடனடியான குழந்தைக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டபோதும், துரதிருஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி கடந்த 5ம் தேதி அந்த குழந்தை மூளைச்சாவு அடைந்தது. இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்று, குழந்தையின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்களை தானம் வழங்க பெற்றோர் அனுமதி அளித்தனர்.
காப்பாற்றப்பட்ட இரண்டு உயிர்கள்:
இதையடுத்து குழந்தையிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நான்கு மாத பெண் குழந்தைக்கு பொருத்தப்பட்டது. அதோடு, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது பெண்ணுக்கு, குழந்தையிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டன. இதன் மூலம், மூளைச்சாவு அடைந்த குழந்தையின் உறுப்புகள் மூலம் இரு உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அக்குழந்தையின் உடலுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி, மருத்துவமனை டீன் தேரணிராஜன், கண்காணிப்பாளர் என்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்பெயின் முதலிடம்:
முன்னதாக கடந்த ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த, 18 மாத பெண் குழந்தையின் உடல் உறுப்புகள் கொண்டு, இரண்டு குழந்தைகளின் உயிர் காக்கப்பட்டடு குறிப்பிடத்தக்கது. உலக அளவில் உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரு லட்சம் பேரில் 400 பேர் உடல் உறுப்பு தானம் செய்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 8 பேரும், தமிழகத்தில் 13 பேரும் மட்டுமே உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.