ABP Nadu Exclusive : சாதி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி.. நடவடிக்கை என்ன? பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிரத்யேக பேட்டி
Periyar University Question Paper Issue: நேற்று நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் வரலாறு துறை தமிழ்நாடு விடுதலை பாடத்தின் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் வரலாறு துறை தமிழ்நாடு விடுதலை பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கேள்வி இடம்பெற்றது.
வினாத்தாள்களில் இது போன்ற சாதி ரீதியான கேள்விகள் இடம்பெறக்கூடாது. இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது என்ற கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஏபிபிநாடு செய்தி நிறுவனம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜெகநாதன் கேட்டபோது, ”அரசு நிகழ்ச்சிக்கு நான் சென்னை வந்துள்ளதாகவும், வினாத்தாள் எழுப்பப்பட்ட கேள்வி குறித்து தற்போது தான் தகவல் வந்துள்ளது. வினாத்தாள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை விசாரித்து வருகிறேன்” என கூறினார்.
மேலும், வினாத்தாள் பல்வேறு பல்கலைக்கழக ஆசிரியர்களை கொண்டு உருவாக்கப்படுவதாகவும், வினாத்தாள் எந்த நிலையிலும் துணைவேந்தர் அல்லது பிற ஆசிரியர் பிரித்து படிக்க அனுமதி இல்லை. இதனால் இதுகுறித்து தமக்கு தெரியாது என்று கூறினார்.
வினாத்தாளில் சாதி ரீதியான கேள்விகள் கேட்கப்பட்டது குறித்து தனி குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். விசாரணையின் முடிவில் இதில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார்.
தேர்வு வினாத்தாள் அமைப்பதற்கு தனி குழு அமைக்கப்பட்டு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்ட பின்னரே தேர்வு வினாத்தாள் தயார் செய்யப்படுகிறது. அதன்பின் அதிகாரிகள் கவனத்திற்கு சென்று அவர்களின் அனுமதி பெற்ற பிறகு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் என்று கூறினார்.
இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல்முறை அல்ல. பல முறை சாதி ரீதியான கேள்விகள் கேட்டப்பட்ட நிலையிலும், இதற்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. குறிப்பாக, முற்போக்கான கருத்துகளை விதைக்கவேண்டிய இடத்தில் உள்ள கல்வி நிலையங்கள், பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை தூக்கி பிடிக்கும் சாதிய அமைப்புக்கு எதிராக விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருதிகின்றனர்.
சாதி ரீதியான கேள்விகள் கேட்கப்படுவது மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதே செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் நோக்கமாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்