உண்மையாக சமூகநீதி வாரம் கொண்டாட பாஜகவுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
தீண்டாமைக் கொடுமையின் உச்சமாக வேங்கைவயல் சம்பவம் நிகழ்ந்தது. இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு காரணமானவர்களை இதுவரை கைது செய்ய முடியவில்லை.
![உண்மையாக சமூகநீதி வாரம் கொண்டாட பாஜகவுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் Truly only Bharatiya Janata Party has the right to celebrate Social Justice Week Minister L. Murugan TNN உண்மையாக சமூகநீதி வாரம் கொண்டாட பாஜகவுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/20/596115e0f15f2488fc8a464cbbfc6bcc1681953911882189_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுதிர் முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை, அலுவலகத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக இருந்தபோது, இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு அலுவலகம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 15 மாவட்டங்களில் கட்சி அலுவலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி எண்ணற்ற பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டங்கள் மக்களைச் சென்று சேர்ந்துள்ளன. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாரதிய ஜனதா கட்சியை நாடி வந்து கொண்டுள்ளனர். உலகத் தலைவராக பிற நாடுகளால் மதிக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடி, ஏழை எளிய வாழ்வாதாரம் மேம்பட தொடர்ந்து உழைத்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமூகநீதி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. உண்மையாக சமூகநீதி வாரம் கொண்டாட பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. திமுக சமூகநீதிக்காக செய்வது போல பெரிதாக பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவது ஒன்று செயலில் ஒன்று என்பது போல நடந்து கொள்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் ஒரு கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர் சென்றதற்கு திமுக நிர்வாகி சொல்ல முடியாத வார்த்தைகளால் ஏசினார். இதுதான் திமுகவின் உண்மையான நிலை. மேலும், தீண்டாமைக் கொடுமையின் உச்சமாக வேங்கைவயல் சம்பவம் நிகழ்ந்தது. இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு காரணமானவர்களை இதுவரை கைது செய்ய முடியவில்லை.
சமூக நீதிக்காக பிரதமர் மோடி எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிற்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரத்தை பிரதமர்தான் கொடுத்தார். இதன் மூலம் அந்த ஆணையத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கான வளர்ச்சியை முன்னெடுத்து பிரதமர் தொடர்ந்து உழைத்து வருகிறார். காசிக்கும் ராமேஸ்வரத்திற்குமான இணைப்பை மீண்டும் ஏற்படுத்தி தமிழக மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திய பிரதமர், தற்போது செளராஷ்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம், செளராஷ்டிர மக்கள் சொந்த மண்ணிற்கு செல்லும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளார். தமிழுக்கு பெருமை சேர்க்கும் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் திருக்குறளை 16 மொழிகளில் மொழி பெயர்த்த பிரதமர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை ஒன்றையும் உருவாக்கியுள்ளார். தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நாடு 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது அனைத்து வளர்ச்சிகளும் கொண்டதாக மாற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பிரதமர் உழைத்து வருகிறார்” என்று தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)