காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்த காவலர்; அடையாளம் தெரியாமல் உடலை அடக்கம் செய்த காவல்துறை
மறுநாள் தேடி சென்ற போது இறந்து போய்விட்டதாக காவல்துறையினர் உடலை எடுத்துச் சென்றதாக காவலர் விசாரணையில் கூறியுள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (51) என்பவர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். மதுவுக்கு அடிமையான இவர் அவ்வப்போது பணிக்கு வராமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதியிலிருந்து அவர் பணிக்கு வரவில்லை. எனவே காவல்துறையினர் வழக்கம்போல் பணிக்கு வரவில்லை என காவல்துறையினர் கருதினர். இந்த நிலையில் அவரது மனைவி மாலா கணவரை தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இது தொடர்பாக சேலம் மாநகர துணை ஆணையாளர் லாவண்யாவிடம் புகார் ஒன்றை கொடுத்தார். இதை எடுத்து டவுன் உதவி ஆணையாளர் வெங்கடேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவரது மனைவி மாலாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சங்ககிரி அருகே உள்ள அத்திமரத்துப்பட்டி காளி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது கணவரின் இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை கடந்த மாதம் 6 ஆம் தேதி கொடுத்ததாக தெரிவித்தார்.
இதை எடுத்து சேலம் சங்கர் நகரில் வாடகைக்கு வீட்டில் வசித்து வந்த பஞ்சர் குமார் திடீரென வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். இதனால் காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சேலம் கோர்ட்டில் சரணடைய திட்டமிட்ட விஜயகுமாரை கைது செய்ய காவல்துறையினர் நீதிமன்றத்தை கண்காணித்தினர். ஆனால் விஜயகுமார் டவுன் உதவி ஆணையாளர் வெங்கடேஷ் முன்பு திடீரென சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் காவலர் ஜெயராமன் காரிப்பட்டி அருகே உள்ள அயோத்தியபட்டணம் வேலூர் மெயின் ரோட்டில் செல்லியம்பாளையத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஆலமரத்து கீழே மதுபோதையில் படுத்திருந்த அவர் இறந்து போனதாகவும், அவரது உடலை காரிப்பட்டு காவல்துறையினர் எடுத்து சென்று விட்டதாக திரும்பிடும் தகவலை தெரிவித்தனர்.

உடனே காரிப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று இது தொடர்பாக விசாரணை செய்தபோது டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி சடலம் ஒன்று கிடந்ததாகவும், விசாரணையில் யாரென்று அடையாளம் தெரியாததால் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். அவரது வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வந்திருந்ததாகவும் தெரிவித்தனர். கிராம நிர்வாக அதிகாரி புகார் பேரில் வழக்கு பதிவு செய்து இறந்து போனவர் யார் என்பது தெரியாத நிலையில் கடந்த 22 ஆம் தேதி பிரேத பரிசோதனைக்கு பிறகு சேலம் நான்கு ரோடு பகுதியில் உடலை அடக்கம் செய்து விட்டதாக கூறினர். இதனிடையே காவலரிடம் சரணடைந்த விஜயகுமார் போலீசில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
காவலர் ஜெயராமனுக்கும், விஜயகுமாருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாக மது குடித்து வந்துள்ளனர். கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி காவலர் ஜெயராமனின் இருசக்கர வாகனத்தில் இருவரும் கருந்துறைக்கு சென்றுள்ளனர். காவலர் என்ற அடையாள அட்டையை பயன்படுத்தி விடுதி ஒன்றில் இரவு தங்கியுள்ளனர். மறுநாள் இருவரும் மது குடித்துவிட்டு செல்லியம்பாளையம் வந்துள்ளனர். மீண்டும் மது குடித்ததால் காவலர் ஜெயராமனால் எழுந்திருக்க முடியவில்லை. இதனால் 50 ரூபாய் கொடுத்து அங்கேயே தூங்குமாறு கூறிவிட்டு அவரது இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் எடுத்துவிட்டு வந்துள்ளார். மறுநாள் தேடி சென்ற போது இறந்து போய்விட்டதாக காவல்துறையினர் உடலை எடுத்துச் சென்றதாக காவலர் விசாரணையில் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் காரிப்பட்டி காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரது நெற்றிப் பகுதியில் லேசான காயம் இருந்துள்ளது. ஆனால் விஜயகுமார் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் இருந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இறந்து போன காவலர் ஜெயராமனுக்கு அன்னதானப் பட்டியில் கள்ளக்காதலி ஒருவர் இருப்பதும் காவல்துறையினர் விசாரணை தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை பெற்று வருகிறது. காவலர் ஜெயராமனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அடையாளம் தெரியாமல் காவலர் உடலை காவல்துறையினர் அடக்கம் செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















