Mettur Dam | மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது; தமிழக டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி.
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் காவிரிக் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக டெல்டா விவசாயிகளின் தாயாக விளங்கிவரும் மேட்டூர் அணை நேற்று இரவு முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
மேட்டூர் அணைக்கான நீர் ஆதாரம் என்று பார்த்தால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் தமிழக-கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து இருந்து வருகிறது. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தென்மேற்கு பருவமழை பொருத்து இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கர்நாடகாவிற்கு மட்டுமே சாதகமாக இருந்தது.
தென்மேற்குப் பருவ மழை குறைவாக இருந்ததால் கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறப்பு என்பது இல்லாத நிலையில், அணையிலிருந்த தண்ணீரை கொண்டும், தென்மேற்கு பருவமழை முழு அளவில் தொடங்கி கர்நாடக அணையில் இருந்து உபரி நீர் திறப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறித்த காலமான ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதிலும் மேட்டூர் அணையில் இருந்த நீர் இருப்பைப் பொறுத்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தமிழக கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வந்தது.
கடந்த 9 ஆம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிறைகள், தமிழக அரசு உத்தரவின்படி 119 அடியில் உபரி நீர் திறக்கப்பட்டது. ஐந்து நாட்களாக அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையம் முலம் நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில். நேற்று இரவு 11:35 மணிக்கு முழு கொள்ளளவை எட்டியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2019 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணை கட்டப்பட்ட 88 ஆண்டுகளில் 41 வது ஆண்டாக முழு கொள்ளளவை நேற்று இரவு எட்டியது. மேட்டூர் அணை நிரம்பி உள்ளதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் காவிரிக் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.