சவுதியில் உயிரிழந்த மகன்.. உடலைக் கொண்டுவர போராடும் தந்தை..! உதவிக்கரம் நீட்டுமா தமிழக அரசு?
ரியாத் பகுதியில் நேர்ந்த திடீர் தீ விபத்தில் எனது மகன் உட்பட இந்தியாவை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி சிவதாபுரம் பகுதியை சேர்ந்த சீதாராமன் ராஜகோபால். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் உள்ள தனியார் பெட்ரோல் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை அவருக்கு சவுதி அரேபியா நாட்டில் வேலை கிடைத்து அங்கு சென்றுள்ளார்.
சவுதியில் உயிரிழந்த தமிழர்:
இந்த நிலையில் நேற்று சீதாராமன் ராஜகோபால் தங்கி இருந்த அறையின் ஏசி பொழுதாகி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சீதாராமன் ராஜகோபால் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக சவுதி அரேபியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீதாராமன் ராஜகோபால் உயிரிழந்த செய்தி அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. உயிரிழந்த தனது மகனின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டுமென சீதாராமனின் தந்தை ராஜகோபால் மற்றும் குடும்பத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றினை அழித்தார்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு:
அந்த மனுவில், எனது மகன் சீதாராமனுக்கு வாசகி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. மூன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் வெளிநாடான சவுதி அரேபியாவில் ரியாத் என்ற பகுதியில் பெட்ரோல் இன்ஜினியர் பணிக்காக கடந்த திங்கட்கிழமை சேலத்தில் இருந்து மும்பை வழியாக சவுதி அரேபியாவிற்கு சென்றார். அங்கு இரண்டு நாள் பணிபுரிந்து வந்த நிலையில் ரியாத் பகுதியில் நேர்ந்த திடீர் தீ விபத்தில் எனது மகன் உட்பட இந்தியாவை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில் எனது மகன் உட்பட இரண்டு பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மேலும் சவுதி அரேபியாவுக்கு சென்று ஒரு வாரத்திற்குள்ளே எனது மகன் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் நேற்றுதான் தெரியவந்துள்ளது. எனது மகன் உடல் எப்படியாவது தமிழ்நாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
பெரும் சோகம்:
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீதாராமன் தந்தை ராஜகோபால், சவுதியில் உயிரிழந்த தனது மகன் சீதாராமனின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறும், சவுதி அரேபியாவில் சீதாராமன் உயிரிழந்தது தொடர்பான எந்த விபரமும் அரசு தரப்பில் இருந்து கிடைக்கவில்லை. சீதாராமன் கடந்த திங்கட்கிழமை தான் சவுதி அரேபியாவிற்கு சென்று தனியார் பெட்ரோல் பங்கில் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
தனது மகன் சீதாராமன் சவுதி அரேபியா சென்ற மூன்று நான்கு நாட்களுக்குள் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்ற தகவலால் செய்வதறியாது வேதனையில் உள்ளோம். அவரது உயிரிழப்பு தொடர்பான விபரம் தங்களுக்கு பெற்றுத் தருமாறும் சீதாராமனின் உடலை சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா கொண்டு வந்து தங்களிடம் ஒப்படைக்குமாறும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக கூறினார்.
சவுதி அரேபியாவுக்கு சென்று மூன்று நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.