"மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்" - அமைச்சர் கே.என்.நேரு
தமிழகத்திற்கு நிதி ஆதாரம் திரட்டவில்லை என எதிர்க்கட்சி குறைகூறிக்கொண்டே இருக்கிறது. நிதியாதாரம் திரட்டுவதற்கு வரி போட்டால் வரி போடுவதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
சேலத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னதாக சேலத்தில் அமைய உள்ள ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, டைடல் பார்க் மற்றும் ஒருங்கிணைந்த வெள்ளி கொலுசு உற்பத்தி மற்றும் விற்பனை மையம் அமைய உள்ள இடங்களில் அமைச்சர் நேரு என்று ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்றும், டைடல் பார்க் நிறுவப்படும் என்றும், வெள்ளி கொலுசு உற்பத்தி மற்றும் ஒருங்கிணைந்த விற்பனை மையம் உருவாக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான இடங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. அந்த இடங்களை இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டார். சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரிக்கு அருகே அமைய உள்ள டைடல் பார்க் இடத்தை முதலில் அமைச்சர் நேரு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் கார்மேகம், அங்கு எவ்வளவு இடம் உள்ளது, டைடல் பார்க் எவ்வாறு நிர்மாணிக்கலாம் என்பது குறித்து அமைச்சரிடம் விளக்கினார். இதனைத்தொடர்ந்து இரும்பாலை சாலையில் உள்ள அரியாகவுண்டம்பட்டியில் ஒருங்கிணைந்த வெள்ளி கொலுசு உற்பத்தி மையம் மற்றும் விற்பனை மையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரு ஏக்கர் 40 சென்ட் நிலம் கொண்ட இடத்தை பார்வையிட்டு, அதில் எத்தனை கடைகள் வர உள்ளது என்பது குறித்து அமைச்சர் நேரு, மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து சேலம் பர்ன் அன் கோ நிறுவனம் பின்புறம் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்காக 198 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தையும் அமைச்சர் நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசும்போது, ”சேலம் மாவட்ட மக்களின் நலனுக்காக தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன்படி நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதற்காக சேலத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும், அதேபோல வெள்ளி கொலுசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த வெள்ளி உற்பத்தி மையம் மற்றும் விற்பனை மைய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தையும், டைடல் பார்க் அமைய உள்ள இடத்தையும் நேரில் ஆய்வு செய்தோம். இது குறித்து தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி விரைவில் இத்திட்டம் தொடங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் கோடை வாசஸ்தலமான ஏற்காட்டில் வருகிற 26-ஆம் தேதி கோடை விழா துவங்குகிறது. ஒரு வார காலம் நடைபெறும் இந்த கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
அதன்பின், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர், முதல்வர் வருகை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தமிழகத்திற்கு நிதி ஆதாரம் திரட்டவில்லை என எதிர்க்கட்சி குறைகூறிக் கொண்டே வருகிறது. நிதியாதாரம் திரட்டுவதற்கு வரி போட்டால் வரி போடுவதாக குற்றம்சாட்டுகிறார்கள். இது குறித்து எதிர்கட்சி மாறி மாறி பேசி வருகிறது. தமிழகத்தில் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது. கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில்தான் கட்டுமான பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தினர். பேருந்து கட்டணங்கள் உயர்வு குறித்து பேசிய அமைச்சர், மக்களை பாதிக்காத விதத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்” என்று கூறினார்.