(Source: ECI/ABP News/ABP Majha)
ரூ.10 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட மருத்துவ கருவிகள்; முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த பொதுக்கணக்கு குழு வலியுறுத்தல்
அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது கடந்த 2016-17 ஆண்டு 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட மருத்துவ கருவிகள் இதுவரை எதற்கும் பயன்படுத்தப்படாமல் ஒரு அறையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுகணக்குக்குழு குழுவினர் இன்று சேலத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்தக் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் வேல்முருகன், சிந்தனைச்செல்வன், ராஜமுத்து, பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர். குறிப்பாக சேலம் மத்திய சிறைச்சாலை, சேலம் அரசு பொது மருத்துவமனை, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும், அதன் மதிப்பீடு குறித்தும் அதிகாரியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். அதற்கான பணிகளின் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”சேலத்தில் பொது கணக்குக்குழு உறுப்பினருடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது கடந்த 2016-17 ஆண்டு 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட மருத்துவ கருவிகள் இதுவரை எதற்கும் பயன்படுத்தப்படாமல் ஒரு அறையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை ஆய்வு மேற்கொண்டபோது அந்தக் கருவி சீனாவிலிருந்து பெறப்பட்டதாகவும், ஆனால் அந்த உபகரணத்தில் ஸ்வீடன் நாட்டில் தயாரிக்கப்பட்டது போன்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. குறிப்பாக அப்போது இருந்த மருத்துவக் கல்வி இயக்குனர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தன்னிச்சையாக இந்த கருவியை வாங்கியது தெரியவந்துள்ளது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் எந்த கருவியும் வாங்குவதற்கு இவருக்கு அதிகாரம் இல்லை. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்” கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய அவர், இந்த மருத்துவ கருவியானது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை பரிசோதிக்க வாங்கியதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பதினாறு லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட கருவியில் பரிசோதனை செய்ய 45 பைசா மட்டுமே செலவாகும் நிலையில், 10 கோடி ரூபாய் முதலீடு செய்து வாங்கப்பட்ட கருவியில் ஒரு பரிசோதனைக்கு 38.32 ரூபாய் செலவாகிறது என்றால் ஏன் பணத்தை விரயம் செய்ய வேண்டும் எனவே இதில் ஊழல் நடந்துள்ளது. அப்போதைய சுகாதாரத் துறைச் செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை எனவே சென்னை சென்ற பிறகு மருத்துவ கல்வி இயக்குனரை வரவழைத்து விசாரணை நடத்த உள்ளோம் என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்து கூறியவர் அரசு மருத்துவமனைக்குள் கேண்டீன் கட்டப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. அதேபோல் மருத்துவர்கள் தங்கும் குடியிருப்புகளுக்கு இதுவரை வாடகை வசூல் செய்யப்படாமல் உள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கடந்த ஆட்சி காலத்தில் கனிமவளத்துறையில் விதிமீறல்கள் அதிகளவில் நடந்துள்ளது அனுமதிபெறாமல் கனிமவளங்களை குவாரிகளில் இருந்து வெட்டி எடுத்து விற்பனை செய்துள்ளனர். இதனை கண்டறிய எல்லாம் குவாரிகளிலும் அப்போது மின்சாரம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது. மின்சாரம் எந்த அளவிற்கு பயன்படுத்தப்பட்டது என்பதை தகவலாக கேட்டுள்ளோம். விதிமீறல்கள் நடந்திருப்பது கண்டறியப்பட்டால் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் வேண்டும் என்றார்.