சேலத்தில் நாளை அரசுத்திட்டங்களை தொடங்கி வைக்கும் முதல்வர் - 30,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க திட்டம்
நாளை 12 அரசு துறைகள் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 38.52 கோடி மதிப்பிலான 83 திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
சேலம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கடந்த மாதம் அரசு சார்பில் பெறப்பட்ட 42 ஆயிரம் மனுக்கள் மீது உடனடி தீர்வாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 261 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 3 நாள் சுற்றுப்பயணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு குறைதீர் முகாம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் நடத்தப்பட்டு 42 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது. அதில் நாளை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. இதன்பின், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியது. சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரே இடத்தில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 261 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
மேலும், 12 அரசு துறைகள் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 38.52 கோடி மதிப்பிலான 83 திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். ஆறு அரசு துறைகள் சார்பில் 54 கோடி ரூபாய் மதிப்பிலான 60 பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். சேலம் மாவட்டத்தில் ரிங் ரோடு அமைப்பது, ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, ஐ.டி பூங்கா செயல்பாடுகள், பனமரத்துப்பட்டி ஏரி சீரமைப்பு உள்ளிட்ட பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. உடனடியாக நிறைவேற்ற வாய்ப்புள்ள திட்டங்கள் குறித்தும் சேலத்திற்கு புதிய திட்டங்கள் தொடர்பாகவும் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிடுவார் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளரிடம் தெரிவித்தார். முன்னதாக விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் டி எம் செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அரசு நலத்திட்ட உதவி உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின், மறைந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா படத்திறப்பு விழாவிலும் பங்கேற்க உள்ளார்.