குப்பையில் இருந்த 12.5 பவுன் தங்கச் சங்கிலி... பார்த்ததும் தூய்மை பணியாளர் செய்த செயல்
காணாமல் போன நகையை குப்பையில் இருந்து கண்டெடுத்து கொடுத்த தூய்மை பணியாளருக்கு நகையின் உரிமையாளர் நன்றி தெரிவித்தார்.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 20 வது கோட்டத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மணிவேல். இவர் இன்று காலை வழக்கம் போல அம்பேத்கர் நகர் பகுதியில் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை தரம் பிரிக்கும் போது அதில் 12 1/2 பவுன் தங்க சங்கிலியை கண்டெடுத்துள்ளார். உடனடியாக அந்தத் தங்கச் சங்கிலியை அருகில் இருந்த கவுன்சிலர் வீட்டிற்கு எடுத்துச் சென்று, மேற்பார்வையாளர் குமரேசன் உடன் சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் ஏற்கனவே 12 பவுன் தங்கச் சங்கிலி மாயமானது குறித்து புகார் அளித்திருந்த நபரை நேரில் வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி குப்பையில் கண்டெடுக்கப்பட்ட தங்க சங்கிலி அவருடையது தான் என்பதை உறுதி செய்து பிறகு அவரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து காணாமல் போன நகையை குப்பையில் இருந்து கண்டெடுத்து கொடுத்த தூய்மை பணியாளருக்கு நகையின் உரிமையாளர் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, போலீசாரம் தூய்மை பணியாளரின் நன்னடத்தைக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

இதுகுறித்து மணிவேல் கூறுகையில், வழக்கம் போல இன்று காலை குப்பை சேகரிக்க சென்றிருந்தேன். அப்போது, குப்பையில் சங்கிலி ஒன்று கிடந்தது. அது தங்கமா அல்லது கவரிங்கா என்று தெரியவில்லை. அதனை உடனடியாக மேற்பார்வையாளர் உதவியோடு சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். யார் பணமும் இதுவரை நான் எடுத்ததில்லை. கடந்த 15 ஆண்டுகளாக மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறேன். இதுவரை இரண்டு முறை தங்க நகைகள் குப்பையில் கிடந்துள்ளது. அதனை காவல்துறையினரின் உதவியோடு உரிமையாளர்களிடம் வழங்கி உள்ளேன். சிறிய வயதில் இருந்து பணத்தின் மீது தனக்கு ஆசை இல்லை. உழைத்து சம்பாதிக்கும் பணம் மட்டுமே போதும் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.






















