சேலம்: எடப்பாடியில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நகராட்சி எச்சரிக்கை
எடப்பாடி பேருந்து நிலைய பகுதியில் நீண்ட காலமாக வாடகை பாக்கி வைத்துள்ள கடை உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை கடிதம் வழங்கிய நகராட்சி அலுவலர்கள்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட கவுண்டம்பட்டி, சக்தி நகர் உள்ளது. இங்கு பத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வந்தனர். அப்பகுதியை ஆய்வு செய்த நகராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர். சம்பந்தப்பட்ட குடும்பங்களை அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டதுடன், அவர்களுக்கு அரசு சார்பில் பழைய எடப்பாடி பகுதியில் இலவச வீட்டுமனைகள் வழங்கினர். இந்நிலையில் அரசு உத்தரவை ஏற்று சக்தி நகர் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தவர்கள், அரசு ஒதுக்கீடு செய்த புதிய மனை பிரிவில் அண்மையில் குடியேறினர். இந்நிலையில் திடீரென சக்தி நகர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை புதுப்பித்து, மீண்டும் அவர்கள் குடியேற முயன்றதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு வழித்தடை பிரச்சனை இருப்பதாக கூறி, சம்மந்தப்பட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சாலையில் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து எடப்பாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு பிரிவினர்களையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தவர்கள் அங்கு மீண்டும் குடி ஏறக்கூடாது எனவும், அரசு ஒதுக்கீடு செய்த புதிய நிலத்தில் தொடர்ந்து வசிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டு அங்கிருந்து அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு நிலத்தில் குடியிருப்பு வாசிகள் மீண்டும் குடியேற முயன்ற நிகழ்வால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதேபோன்று, எடப்பாடி நகர பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அலுவலர்கள், பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளை ஆய்வு செய்து, வாடகை செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கினர்.
எடப்பாடியில் பஸ் நிலையப் பகுதியில் அண்மை காலமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்லவும், பயணிகள் நடைமேடையை கடந்து செல்லவும் சிரமப்பட்டு வருவதாக புகார் எழுந்த நிலையில், நகராட்சி ஆணையாளர் சசிகலா தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் எடப்பாடி பேருந்து நிலையத்தின் பல்வேறு பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
குறிப்பாக குமாரபாளையம் வழித்தடம் மேட்டூர் மற்றும் ஈரோடு பகுதி பஸ்கள் வந்து செல்லும் நடைமேடை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அலுவலர்கள், அப்பகுதியில் உள்ள நகராட்சி கடைகளை ஆய்வு செய்து, கடை உரிமையாளரிடம் கழிவுநீர் அகற்றல், குப்பைகளை பராமரித்தல் மற்றும் பயணிகள் பாதிக்காதவண்ணம் வணிகம் செய்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் எடப்பாடி பேருந்து நிலைய பகுதியில் நீண்ட காலமாக வாடகை பாக்கி வைத்துள்ள கடை உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை கடிதம் வழங்கிய நகராட்சி அலுவலர்கள் அடுத்து வரும் இரு தினங்களுக்குள் பேருந்து நிலைய பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் நிலுவையில் உள்ள பாக்கித்தொகை முழுவதும் செலுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்த தவறும் கடை உரிமையாளர்களின் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.