வெகு விமரிசையாக நடந்தது, உலகின் மிகப்பெரிய முருகன் சிலை கும்பாபிஷேக விழா..
முருகன் சிலை மட்டும் 126 அடி உயரத்திலும், அதன் பீடம் 20 அடி உயரத்திலும் என 146 அடியில் முத்துமலை முருகன் சிலை மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். தமிழ் நிலத்துக்கே உரிய வழிபாடாக முருகன் வழிபாடு உள்ளது. முருகனைப் பற்றி குறிப்பிடும் போது, தமிழ் கடவுள் என்றே பக்தர்கள் பெருமிதப்படுகிறார்கள். உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்கள், தங்களது பகுதிகளில் முருகனுக்கு கோயில்கள் கட்டி வழிபடுகின்றனர். அந்த வகையில் மலேசியாவில் 140 அடி உயரத்தில் முருகன் சிலை அமைந்திருக்கும் கோவில் பிரசித்தி பெற்றுள்ளது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய முருகன் சிலையைக் கொண்ட நாடாக இந்தியா தற்போது மாற்றம் பெற்றுள்ளது.
சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஏத்தாப்பூரில் 146 அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முத்துமலை முருகன் என்றழைக்கப்படும் இந்த முருகப் பெருமான் வலது கையால் ஆசீர்வாதம் செய்தபடி மற்றொரு கையில் வேலைத் தாங்கி, மணிமகுடம் சூடி ராஜ அலங்காரத்தில் காட்சியளிப்பது முருக பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
முருகன் சிலை மட்டும் 126 அடி உயரத்திலும், அதன் பீடம் 20 அடி உயரத்திலும் என 146 அடியில் முத்துமலை முருகன் சிலை மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. முருகன் சிலையின் கிரீடம் மட்டும் 24 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 85 அடி உயரத்தில் வேல், 16 அடி சுற்றளவில் மாலை உள்ளது. முருகன் சிலையின் 60 அடி உயர இடுப்பு பகுதியில்ல 10 பேர் தியானம் செய்யும் மண்டப அறையும் உள்ளது. இங்குள்ள வேல் மீது ஊற்றப்படும் பால், அறுபடை கோவிலின் மூலவருக்கு சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலை உருவாக்க 400 டன் இரும்பு, 25 ஆயிரம் மூட்டை சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள முருகன் சிலையை வடிவமைத்த ஸ்தபதி தியாக ராஜன் என்பவரே, இந்த சிலையையும் உருவாக்கியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கிய உலகின் மிகப்பெரிய முருகன் சிலை கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் கடந்த ஓராண்டாக நடந்து வந்த இந்தப் பணி தற்போது நிறைவடைந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. யாக சாலை பூஜைக்குப் பின்னர் சுவாமியின் திருமேனியில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது.
இக்கோவிலில் இனி நாள் தோறும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக உருவெடுத்துள்ள முத்துமலை முருகன் கோவில் மகா கும்பாஷேக விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். உலகின் மிகப்பெரிய முருகன் சிலை கொண்ட நாடாக இந்தியா மாறியிருப்பது முருக பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.