Salem Ring Road: சேலம் பைபாஸ் சாலை திட்டம்: பரபரப்பான அப்டேட்! விரிவான அறிக்கை எப்போது? பாதை குறித்த மர்மம்!
சேலம் மாநகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பைபாஸ் சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.விரிவான திட்ட அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை துறை செய்து வருகிறது.

சேலம் பைபாஸ் சாலை திட்டம் ; விரிவான திட்ட அறிக்கை ரெடி - NHAI விளக்கம்
சேலம் மாநகராட்சி நாளுக்கு நாள் பல்வேறு உள்கட்டமைப்பு வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதேபோன்று மக்கள் தொகையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி சேலம் மாநகர பகுதியில் 10,83,054 பேர் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தனிநபர் வாகனங்களால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதையொட்டி கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டன. இருப்பினும் நெரிசல் குறைந்தபாடில்லை. எனவே புதிய நெடுஞ்சாலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலத்தை சுற்றி வரும் வகையில் பைபாஸ் சாலை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பிற முக்கிய நெடுஞ்சாலைகள் உடன் இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
சேலம் ரிங் ரோடு
இந்நிலையில் ஆர்.டி.ஐ மூலம் சேலம் பைபாஸ் சாலை திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அதில், சேலம் ரிங் ரோடு தொடர்பாக கடந்த மார்ச் 24, 2025 அன்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் பேசுகையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இது உறுதி செய்யப்பட்ட தகவலா? என்று கேட்கப்பட்டது. அதற்கு உண்மை தான். NHAI மூலம் சேலம் பைபாஸ் சாலை திட்டத்திற்கு DPR தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன என்று பதில் அளிக்கப்பட்டது.
விரிவான திட்ட அறிக்கை இன்னும் தயார் செய்யும் நிலையில் தான் உள்ளது!
சேலம் ரிங் ரோடு எந்த வழித்தடத்தில் பரிந்துரை செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, வழித்தடம் தொடர்பாக இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. சேலம் ரிங் ரோடு திட்டம் எத்தனை கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டம் தொடர்பாக விரிவாக விவரம் அளிக்க முடியுமா? என்ற கேள்விக்கு, தகவல்கள் ஏதும் இல்லை என்று பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்திற்கான மொத்த மதிப்பு எவ்வளவு, ஒவ்வொரு கட்டமாக எவ்வளவு செலவிடப்படுகிறது? என்ற கேள்விக்கு விரிவான திட்ட அறிக்கை இன்னும் தயார் செய்யும் நிலையில் தான் உள்ளது.
வழித்தடமும் இறுதி செய்யப்படவில்லை. எனவே இவை அனைத்தும் தெரிந்த பின்னர் தான் தகவல் கிடைக்கும். தற்போதைக்கு விவரங்கள் ஏதும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதுபற்றி சேலம் வட்டாரத்தில் விசாரிக்கும் போது, சேலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது என பைபாஸ் சாலை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரிங் ரோடு தான் பைபாஸ் சாலை. இது ஓமலூரில் இருந்து பிரிந்து மாமாங்கம் வழியாக சுற்றி வருகிறது. அப்படியே அயோத்தியாபட்டினம் வரை நீள்கிறது.
அதன்பிறகு சீலிநாயக்கன்பட்டி பைபாஸ், கொண்டலாம்பட்டி பைபாஸ் வழியாக பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்திலேயே பைபாஸ் சாலை போடுவதற்கு திட்டமிட்டனர். ஆனால் அப்படியே விட்டுவிட்டனர். தற்போது அந்த புரபோசல் தான் இருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றனர்.




















