Agaya Gangai Falls: ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்.. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, முட்டல் அருவியில் குளிக்க தடை
கடுமையான குளிர் நிலவி வருவதால், மலை வாழ் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு, விவசாய பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலையில் பலத்த மழை பெய்து வருவதால், அனைத்து அருவிகளிலும் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த 2 நாட்களாக, தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், அங்குள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் முழுவதும் கோவிலூர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருகில் நெருங்க முடியாத அளவிற்கு தண்ணீர் வேகமாக கொட்டுகிறது. மழையின் வனப்பகுதி காரணமாக வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் அதிகளவில் ஓடுகிறது. இதன் காரணமாக மாசிலா அருவி, நம் அருவி, சந்தன பாறை அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிக்கு செல்லும் பாதைகள் வனத்துறையினரால் மூடப்பட்டுவிட்டது. இதனால் கொல்லிமலையில் உள்ள அருவிகளில் குளிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
தொடர் மழையின் காரணமாக கொல்லிமலை மலைவாழ் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது. ஐந்து நாடு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள காட்டாறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் நின்று விட்டது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. கடுமையான குளிர் நிலவி வருவதால், மலை வாழ் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு, விவசாய பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சோளக்காடு, தெம்பளம், திண்டுப்பட்டி உள்ளிட்ட பழச்சந்தைகளில் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள், பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் இருந்து செல்லும் தண்ணீர், திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள புளியஞ்சோலை அடிவாரப் பகுதியில் உள்ள அருவிக்கு செல்வதால், அங்கும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அங்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதைப்போல், சேலம் மாவட்டம், ஆத்தூர் வனக்கோட்டத்தில் உள்ள கல்லாநத்தம் கிராமம், ஆனைவாரி முட்டலில் அருவி, ஏரி இருக்கிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியை சூழல் சுற்றுலா மையமாக அறிவித்து வனத்துறை பராமரித்து வருகிறது. ஆண்டு முழுவதும் முட்டல் சூழல் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அருவில் குளிப்பதும், ஏரியில் படகு சவாரி செய்வதுமாக இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், முட்டல் அருவியில் நீர்வ ரத்து அதிகரித்து, பெரும் வெள்ளமென பாய்ந்தோடுகிறது. இதனால், ஏரியும் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக, முட்டல் அருவிக்கும், ஏரிக்கும் வர தடை விதித்து, ஆத்தூர் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியசேவியர் அறிவித்துள்ளார். முட்டல் அருவில் அதிகளவு வெள்ளநீர் வருவதால், சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை, யாரும் முட்டல் சூழல் சுற்றுலா மையத்திற்கும், அருவியில் குளிக்கவும் வர வேண்டாம் என அறிவிப்பு பலகையை முன்பகுதியில் வனத்துறையினர் வைத்துள்ளனர்.