சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்... ஏற்காடு மலைப்பாதையில் தொடங்கியது போக்குவரத்து
மலை கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள், அலுவலக பணிக்கு செல்வோர், அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதி.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கிய மழை டிசம்பர் 2ஆம் தேதி வரை கனமழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் மற்ற இடங்களை காட்டிலும் ஏற்காட்டில் அதிக மழை பெய்தது. கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி காலை நிலவரப்படி 144.4 மில்லி மீட்டர் மழையும், 2ம் தேதி 238 மில்லி மீட்டர் மழையும், 3ம் தேதி 98.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இம்மழையால் ஏற்காடு மலைப்பாதை மற்றும் கிராமப்பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு சாலையில் பரவி இருந்தது. அதே போல் மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தது. மரங்கள் சாய்ந்ததில் பல இடங்களில் மின்கம்பங்கள் உடைந்து சேதமானது. இதன் காரணமாக ஏற்காட்டில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை. அங்குள்ள மக்கள் மின்சாரம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் மண்சரிவு காரணமாக ஏற்காட்டிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்து இருந்தார். சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வருவதை தவிர்க்க அடி வாரத்தில் செக்போஸ்டில் போலீசார் வாகனங்களை திருப்பி அனுப்பினர். கடந்த 1ம் தேதி காலை வரை ஏற்காடு பிரதான சாலை வழியாக ஏற்காட்டிற்கு பஸ்கள் மற்றும் மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. மண்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டதால், கடந்த மூன்று நாட்களாக பஸ்கள் மற்றும் மற்ற வாகனங்கள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டையை அடுக்கி, மேலும் மண் சரிவு ஏற்படாமல் இருக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோல் மலை கிராமங்களில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்த மரங்களை உபகரணங்கள் கொண்டு வெட்டி அகற்றப் பட்டுள்ளது. மின்கம்பங்கள் உடைந்த இடங்களில் மின் வாரிய ஊழியர்கள் சீர் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஏற்காடு பிரதான சாலையில் மலைப்பாதை சீரானதால் நேற்று மதியம் 3 மணியில் இருந்து இரு சக்கர வாகனம், கார், ஜீப், வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. பஸ்கள் அயோத்தியாப்பட்டணம், குப்பனூர், கொட்டச்சேடு வழியாக ஏற்காட்டிற்கு செல்கிறது. வழக்கமான சேலம் - ஏற்காடு பிரதான பாதையில் ஏற்காடு செல்ல ஒரு மணி முதல் 1.15 மணி நேரமாகும். குப்பனூர் வழியாக பஸ்கள் இயக்கப்படுவதால் 2.30 மணி நேரமாவதாக பயணிகள் தெரிவித்தனர். அதேபோல் லாரிகளும் குப்பனூர் வழியாகத்தான் இயக்கப்படுகிறது.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்காட்டிற்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து முளுவி, செம்மநத்தம், கரடியூர், நாகலூர் உள்பட 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இங்குள்ள மாணவ, மாணவிகள் நடந்தே பள்ளிக்கு சென்றனர். அதேபோல் அலுவலக பணிக்கு செல்வோர், அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள் பஸ் இயக்கப்படாததால் கடும் அவதிக்குள்ளாகினர்.