"எங்க மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் வேண்டும், அதிகாரிகள் எங்களை மதிப்பதில்லை” - திமுக மூத்த நிர்வாகி குமுறல்
திமுக நிர்வாகிகளை அதிகாரிகள் மதிப்பதில்லை. மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகள் அரசு அதிகாரிகளிடம் அழைத்து கட்சியினர் வந்தால் செய்து கொடுக்கும்படி சொல்ல வேண்டும்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள பாகல்பட்டியில் திமுக ஓமலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓமலூர் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மூத்த நிர்வாகி ராஜி என்பவர் பேசுகையில், திமுக நிர்வாகிகளை அதிகாரிகள் மதிப்பதில்லை. ஆட்சியில், அதிகாரத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் அதிகாரிகளிடம் அறிவுறுத்த வேண்டும் என்றார். அப்போதுதான் நிர்வாகிகள் மதிப்பார்கள், கட்சி வளரும் தொண்டர்கள் வளர்வார்கள். நமது அரசாங்கத்தை அதிகாரிகள் மதிப்பதில்லை. மேலே இருப்பவர்கள் அதிகாரிகளை அழைத்து கட்சியின் நிர்வாகிகள் வந்தால் செய்து கொடுக்கும்படி சொல்ல வேண்டும். மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகள், எம்.எல்.ஏ, பொறுப்பு அமைச்சர் நேரு இதனை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக உள்ள அமைச்சர் கே.என்.நேரு, பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். அப்போது நம்மால் அவரிடம் பேச முடியவில்லை. இதனால் எதுவும் கேட்கவும் முடியவில்லை, செய்யவும் முடியவில்லை. "தாயிடம் தாய்ப்பால் குடித்தால் வயிறு ரொம்பம். அடுத்த தாயிடம் பிடித்தால் ரொம்ப?" என கேள்வி எழுப்பினார். எனவே சேலம் மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் கொடுத்தால், தூங்கி எழுந்தவுடன் வண்டியில் சென்று தங்களது தேவைகளை கேட்க முடியும். தளபதி சேலத்திற்கு அமைச்சர் கொடுக்க பயந்து விடுகிறார். அமைச்சர் இல்லை என்றால் சேலத்தில் வெற்றி பெற முடியாது. எனவே சேலம் மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் அவசியம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
கடந்த சில நாட்களாக அமைச்சரவை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சேலத்தில் உள்ள எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி வந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டுமே கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மட்டுமே திமுக சட்டமன்ற உறுப்பினராக சேலத்தில் உள்ளார். எனவே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என திமுகவினர் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் ராஜேந்திரன். இவருக்கு அமைச்சர் பதவி கட்டாயம் வழங்கப்படும் என திமுக ஆட்சி அமைந்த உடன் கூறப்பட்டது. ஆனால் அப்போது வழங்கப்படவில்லை. இதற்கு காரணம் சேலம் மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதி மட்டுமே திமுக வெற்றி பெற்றது தான். இதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி அடைந்தது. சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக வேட்பாளர் செல்வகணபதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு பெரிதும் காரணமாக இருந்த ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக தகவல் பரவின. சேலம் மத்திய மாவட்ட செயலாளர் உள்ள எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என சேலம் மாவட்ட திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மறைமுகமாக பேசப்பட்டு வந்த எம்எல்ஏ ராஜேந்திரனின் அமைச்சர் பதவி குறித்து அவரது தொண்டர்கள் வெளிப்படையாக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.