சேலத்தில் செயல்முறை மதிப்பெண் வழங்க கோரி மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
மதிப்பெண் வழங்காவிட்டால் மேற்படிப்பை தொடர முடியாமல் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என மாணவி வேதனை.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவர் சேலம் தாரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இந்த நிலையில் ஓமலூரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் கல்லூரியில் சேர்வதற்காக பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பதில் பதினோராம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் செயல்முறை மதிப்பிற்காக 10 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்ரீமதிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது சேலம் கோட்டை பகுதியில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கு அவரது மதிப்பெண் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்திற்கு சென்று கேட்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கவலை அடைந்த மாணவி ஸ்ரீமதி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், பதினொன்றாம் வகுப்பு பயின்று வந்தபோது ஆங்கில பாடத்தில் செய்முறை மதிப்பெண் வழங்கவில்லை. பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வருவதாகவும், சென்னைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர். பின்னர் தேர்வுதுறை உதவி இயக்குனரை சந்தித்து முறையிட்டதால் சென்னைக்கு சென்று பார்க்குமாறு தெரிவிக்கின்றனர். எனவே தனக்கு செய்முறை மதிப்பெண் வழங்கவேண்டும், இல்லாவிட்டால் மேற்படிப்பை தொடர முடியாது என்று கல்வி நிர்வாகம் தெரிவிப்பதால் தன்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தோம்.
இதுகுறித்து பேசிய மாணவி ஸ்ரீமதி, கடந்த ஆறு மாதமாக 11ஆம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் செயல்முறை மதிப்பெண் தொடங்காததால் பல இடங்களில் முறையிட்டு வருகிறேன். கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நெருங்கி வரும் நிலையில் 11 ஆம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் செயல்முறை மதிப்பெண் பூஜ்ஜியமாக இருப்பதால் தேர்வு எழுத அனுமதிப்பார்களோ என்பது சந்தேகம் எழுந்துள்ளது. சேலம் மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தில் கேட்டபோது சென்னைக்கு சென்று பார்க்குமாறு கூறுகின்றனர். ஆனால் கூலி வேலை செய்யும் எனது பெற்றோரால் சென்னை வரை அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சேலம் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எனது செயல்முறை மதிப்பினை வழங்குவதற்கு உதவி செய்ய வேண்டும் என கூறினார்.