Yercaud: ஏற்காடு செல்லும் வாகனங்கள் ஆய்விற்குப் பின்னரே அனுமதிக்கப்படும் - சேலம் ஆட்சியர்
சேலம் குப்பனூர் வழியாக ஏற்காடு மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் மூன்று விபத்துக்கள் நடைபெற்று உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வந்து செல்கின்றனர். பள்ளிகள் விடுமுறை மற்றும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏற்காட்டிற்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே ராட்சத பாறைகளும் சாலையில் சரிந்து விழுந்தன. குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுக்கு வைக்கப்பட்டிருக்கும் மணல் மூட்டைகள் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பதை அன்றாடம் அச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருந்தது. மேலும் இந்த ஆண்டு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா தளங்கள் ஏற்காட்டில் பல்வேறு சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோரிமேடு வழியாக சேலம் - ஏற்காடு மலைப்பாதையை சீரமைக்க சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. எனது சேலம் - ஏற்காடு பிரதான மலைப்பாதையை சீரமைக்கும் பணி 24.04.2023 முதல் 28.04.2023 வரை ஐந்து நாட்களுக்கு இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட ஐந்து நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால் பணிகள் முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்க படாது எனவும், சேலம் குப்பனூர் வழியாக நான்கு சக்கர வாகனங்கள் ஏற்காட்டிற்கு செல்லவும் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சேலம் குப்பனூர் வழியாக ஏற்காடு மலைப்பகுதியில் செல்லும் வாகனங்கள் கடந்த இரண்டு நாட்களில் மூன்று விபத்துக்கள் நடைபெற்று உள்ளது. இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் விதமாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் விபத்துகளை ஆய்வு செய்ததில் வாகனங்களில் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. எனவே ஏற்காட்டிற்கு செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் மலைப்பகுதிகளில் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களின் திறனும், துறை அலுவலர்களால் சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்காட்டிற்கு வருகை தரும் வாகன ஓட்டிகள் சுற்றுலாப் பயணிகள், சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே சேலம் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதை சில இடங்களில் மிகக் குறுகலாக இருப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்த நிலையில் ஆய்வு செய்யப்பட்டு வாகனங்கள் அனுப்பப்படும் என்ற உத்தரவு மேலும் காலதாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.