Mettur Dam : சேலம் மேட்டூர் அணை: நீர் திறப்பு அதிகரிப்பு! வரலாறு காணாத அளவு நீர்மட்டம்!
மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 58,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 57,000 கன அடியாக குறைந்துள்ளது.

சேலம் : மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 58,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து வரும் நீரின் அளவு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு மாறுபடுவதால் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது
விநாடிக்கு 58,000 கனஅடி நீர் திறப்பு
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்கள் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளான வயநாடு, தலைக்காவேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் காவிரிப் படுகையில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் உபரி நீர் முழுவதையும் தமிழகத்திற்கு திறந்துவிட்டது கர்நாடகா. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக அதிகப்படியாக மேட்டூர் அணையை நோக்கி வந்துகொண்டுள்ளது. நீர்வரத்து அதிகமாக இருந்த காரணத்தால் மேட்டூர் அணை இந்த ஆண்டில் முதல் முறையாவும், வரலாற்றில் 44வது முறையாக முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை இரவு விநாடிக்கு 51,401 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 40,500 கனஅடியாகவும், மாலை 50,500 கனஅடியாகவும் பதிவானது. அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ள நிலையில், அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை 10 மணிக்கு விநாடிக்கு 50,000 கனஅடியாகவும், மாலை 5 மணிக்கு 58,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57,000 கன அடியாக குறைந்துள்ளது
ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 57 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. கபினி அணையில் இருந்து வரும் நீரின் அளவு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு மாறுபடுவதால் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. எனினும், நீர்வரத்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்ளதால், அருவி மற்றும் ஆறுகளில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 65,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 57,000 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 12-வது நாளாக தடை தொடர்கிறது.
மேட்டூர் அணை நீர் திறப்பு ; நிரம்பிய ஏரிகள்
மேட்டூர் அணை நிரம்பியதால், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து, ஏரிகளுக்கு நீரேற்றும் பணி கடந்த ஜூன், 29ல் தொடங்கப்பட்டது. இதனால், 3 நாட்களுக்கு முன் மானத்தாள் ஏரி நிரம்பி கோடி விழுந்தது. அதிலிருந்து வெளியேறிய நீர், தொளசம்பட்டி ஏரிக்கு சென்றது. நேற்று முன்தினம் மாலை, அந்த ஏரியும் நிரம்பி கோடி விழுந்தது. தொடர்ந்து பெரியேரிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பகுதிக்கு குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன், 12ல் காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 26,560 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 39,238 கன அடியாக அதிகரித்தது. அதில், 38,418 கன அடி தண்ணீர் முழுவதும், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுப-டிக்காக காவிரியாற்றில் திறக்கப்பட்டது. தென்கரை வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்காலில், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 820 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.08 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.





















