Salem Leopard: சேலத்திற்கு சிறுத்தை வந்தது எப்படி?; வனத்துறையின் அதிர்ச்சி தகவல் - பீதியில் மக்கள்
10 வயதுக்குள் உள்ள குழந்தைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள வயல் வெளிக்கு அனுப்ப கூடாது என வனத்துறை சார்பில் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி மற்றும் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 8 மாதமாக அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக மக்கள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, டேனிஷ்பேட்டை வனத்துறை அதிகாரிகள், கேமரா பொருத்தி கண்காணித்தும், சிறுத்தை குறித்த தடயம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், மலை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடுகள் மர்மமாக இறந்து கிடந்தன.
சேலத்தில் சிறுத்தை நடமாட்டம்:
இந்நிலையில், கடந்த மாதம் எலத்தூர், ராமசாமிமலை, குண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக, மக்கள் தெரிவித்து வந்தனர். அங்குள்ள நாயையும், ஆட்டையும் சிறுத்தை கடித்து சாப்பிட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சக்கரை செட்டிப்பட்டி கிராமத்தில் பட்டிக்குள் புகுந்து 6 ஆடுகளை அடித்து சாப்பிட்டது. இந்நிலையில், 6 மாதத்திற்கு பிறகு, தற்போது மீண்டும் காருவள்ளி ஊராட்சியில் உள்ள காருவள்ளி கரடு, கோம்பை கரடு பகுதிக்கு வந்த சிறுத்தை, வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு மாட்டை அடித்து சாப்பிட்டுள்ளது.
வேட்டையாடிய சிறுத்தை:
காருவள்ளி கிராமம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது தோட்டத்தில் 3 மாடுகள், 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி தனது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, மாலை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு, மாடுகளை கட்டி வைத்து விட்டு தூங்கி உள்ளார். ஆனால் எழுந்து பார்த்தபோது, ஒரு மாட்டை காணவில்லை. தேடி பார்த்த போது, 200 அடி தொலைவில் மாடு கழுத்து மற்றும் பின் தொடை பகுதியில் விலங்குகள் கடித்து கொன்று, இழுத்து சென்று தின்றது தெரியவந்தது.
இதுகுறித்து, அவர் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த டேனிஸ்பேட்டை வனத்துறை அதிகாரிகள், வனப்பகுதி, கரடு, வயல் வெளி ஆகிய பகுதிகளில் விலங்கு நடமாட்டம் குறித்து ஆய்வுகள் செய்தனர். அப்போது, பல இடங்களில் சிறுத்தையின் கால் தடம் இருந்ததை கண்டறிந்தனர். தொடர்ந்து கால் தடங்களை கெமிக்கல் தண்ணீரில் கலந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கரட்டின் உச்சியில் சிறுத்தை உருவத்துடன் இருந்த விலங்கை பார்த்ததாக பொதுமக்கள் சிலர் கூறியுள்ளனர்.
மேட்டூரிலும் சிறுத்தை நடமாட்டம்:
மேட்டூர் அடுத்துள்ள நங்கவள்ளி ஒன்றியத்தில் சன்னியாசி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி பழனிசாமி. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மேய்ச்சலுக்கு அனுப்பிய ஆடுகளை மாலை வழக்கம் போல் வீட்டின் முன்பு உள்ள பட்டியில் அடைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை வந்து பார்த்தபோது 15 கிலோ எடை கொண்ட வெள்ளாடு காணாமல்போனது.
வீட்டின் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று பார்த்தபோது ஆட்டின் தலை மற்றும் எச்சம் காணப்பட்டது. இது குறித்து பழனிசாமி மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால், இதற்கு காரணம் சிறுத்தையா? என சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் நான்கு இடங்களில் கேமராக்கள் பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
சிறுத்தை இருப்பது உறுதி:
இதையடுத்து, சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தையைப் பிடிப்பதற்காக 12 இடங்களில் கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் மூன்று கூண்டுகள் அமைத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை தேடி வருகின்றனர். ஆனால் சிறுத்தை கடந்த ஒரு வாரமாக வனத்துறையால் வைக்கப்பட்ட எந்த கேமராவிலும் பதிவாகவில்லை.
இதனால் சிறுத்தை வேறு பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மேட்டூரிலும் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறை அதிகாரிகள், காடையாம்பட்டியில் நடமாடிய சிறுத்தை மேட்டூர் வந்துள்ளதா? அல்லது சேலம் மாவட்டத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாடி வருகிறதா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியது.
சேலத்தில் சிறுத்தை வந்தது எப்படி?
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் நடமாடும் சிறுத்தை ஓசூர் மலைப்பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என வனதுறையினர் தெரிவித்து வருகின்றனர். இதுபோல் மேட்டூரில் நடமாடும் சிறுத்தை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காடுகளில் இருந்து வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் சேலத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாடுவது உறுதியாகி உள்ளது.
குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம்:
பொது மக்கள் தனியாக வனப்பகுதிக்கோ, வனத்தை ஒட்டியுள்ள பகுதிக்கோ செல்ல கூடாது. வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது. 10 வயதுக்குள் உள்ள குழந்தைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள வயல் வெளிக்கு அனுப்ப கூடாது என வனத்துறை சார்பில் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தை ஒரே இடத்தில் இல்லாமல், உணவு தேவைக்கு ஏற்ப, வனத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதால், அதை கண்காணிக்க முடியாமலும், கண்டுபிடிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் காருவள்ளி கரட்டை சுற்றியுள்ள கஞ்சநாயக்கன்பட்டி, மூக்கனூர், பூசாரிப்பட்டி, குண்டக்கல் மற்றும் மேட்டூர் இடங்களில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.