சேலம்: கனமழை காரணமாக வயலில் சூழ்ந்த வெள்ளம்.. விவசாயிகள் வேதனை
பயிரிடப்பட்டிருந்த சோளம், நெல், கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.
தொடர்மழை காரணமாக சேலம் சிவதாபுரம் பகுதியில் 20 ஏக்கர் விளைநிலத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்னத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. நன்பகல் தொடங்கிய மழை இரவு வரை விட்டுவிட்டு பெய்தது. இதன்காரணமாக தாழ்வான சாலைகள் வெள்ளக்காடாக மாறின. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக மேட்டூரில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சேலம் மாநகர பகுதிகளில் 2.4 சென்டி மீட்டர் மழை பெய்தது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி எல்லைப்பகுதியில் உள்ள சிவதாபுரத்தில் சுமார் 20 ஏக்கர் விளைநிலங்களில் மழைநீர் புகுந்து ஏரிபோல காட்சி அளிக்கிறது.
இதனால் அங்கு பயிரடப்பட்டிருந்த சோளம், நெல், கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. கடந்த 15 ஆண்டுகளாக மழைக்காலங்களில் சிவதாபுரம் பகுதியில் இதே நிலை நீடிப்பதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், முதல்வரின் தனிப்பிரிவு என பல புகார்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர். மேலும், தேங்கி நிற்கும் மழைநீரால் பயிர்கள் பாதிக்கப்படுவதோடு டெங்கு காய்ச்சல் பரவும் சூழலும் உருவாகியுள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
சிவதாபுரம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி பகுதியில் கட்டப்பட்டுள்ள துணைமின் நிலைய வளாகத்தில் தேங்கும் மழைநீர் வெளியேற்றப்படுவதால் இதுபோன்ற பிரச்சனை நீடித்து வருவதாகவும், மழைநீர் வடிய கால்வாய் அமைத்து நிரந்தர தீர்வுகாண சேலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோன்று சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள செங்கல் அணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் கரை உடைந்து சாலையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மாவட்டத்திற்குள் வரமுடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சேர்வராயன் மலைப்பகுதியில் நேற்று கன மழை பெய்ததால் சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள திருமணிமுத்தாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று சேலம் மாவட்டத்தில் 288.80 மழை பதிவானது. இதில் அதிகபட்சமாக மேட்டூரில் 92.2 மி.மீ மழையும், பனமரத்துப்பட்டியில் 45 மி.மீ, ஏற்காடு 36.6மி.மீ, கங்கவல்லி 25 மி.மீ, சேலம் 24.7 மி.மீ, ஆத்தூர் 22.4 மி.மீ, ஓமலூர் 6 மி.மீ, எடப்பாடியில் 4.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த வாரம் முழுவதும் சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விட்டு விட்டு வரும் சிறிய மழைக்கே சேலத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.