"சிறைக்கு செல்லும் இளைஞர்கள்தான் அதிக குற்றங்களை கற்கின்றனர்"...சேலம் மாவட்ட ஆட்சியர் வேதனை!
ஒரு ஆண்டில் சேலம் மாவட்டம் முழுவதும் 376 குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு துறைக்கு சொந்தமான மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட ஊரகப்பகுதிகளுக்கான விளையாட்டுப் போட்டி நடத்துவது தொடர்பாக அலுவலர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதல் கலந்து கொண்டு பயிற்சி அலுவலர்களுடன் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், 'களமாட விரும்பும் இளைய தலைமுறை வெற்றி வாகை அனைத்து வழிவகைகளையும் தமிழ்நாடு அரசு செய்து தரும்” என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் ஊரக பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தினை அதிகரித்து அதிகளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதற்கென விளையாட்டுப் போட்டிகளினால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 385 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார். மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , விளையாட்டு சங்கங்கள் ஆகியதுறைகளை ஒருங்கிணைத்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இளைய தலைமுறையினருக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் போது எதிர்காலத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய தேவைகள் குறைவாகவும், ஆரோக்கியமான சமுதாயத்தை அடைய வழிவகுப்பதோடு எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் ஒருங்கிணைக்கும் மையமாக விளையாட்டு திகழ்கிறது . ஆரோக்கியமான கிராம சமுதாயத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் தண்ணி அடிப்பார்கள் மேலும் அவ்வழியே செல்லும் பெண்களை வழி மறித்து காதல் தொல்லை மற்றும் கொலை செய்வது. இதுபோன்று சமூகம் எவ்வளவு சீரழிய வேண்டுமோ அவ்வளவு சீரழிந்து விட்டது. இதே நிலைமை தொடர்ந்தால் வீதிகளில் நடமாட முடியாத சூழல் உருவாகும். மேலும் ஒவ்வொரு ஊர்களிலும் தான் இந்த சாதி தான் அந்த சாதி என்று இரண்டு குழுக்களாக உருவாகியுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் சேலம் மாவட்டம் முழுவதும் 376 குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைக்கு செல்லும் இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றங்களை கற்று வருகின்றனர். சிறைக்குள் செல்லும் 114 இளைஞர்கள் வெளியே வரும்பொழுது 1144 குற்றவாளிகளாக வெளியே வருகின்றனர். இது மட்டுமல்லாமல் திருட்டு , வழிப்பறி, ரேப் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றங்களை கணக்கீடு செய்தால் ஆயிரத்திற்கும் மேல் தாண்டும் நிலை உள்ளது. இதனால் குற்றவாளிகள் நிறைந்த சமூகமாக மாறி வருகிறது. இளைஞர்களும் ஆண்களும் திசை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு திசை மாறிச் சென்றாள் மீள்வது மிக கடினம். மேலும் தற்போது பள்ளிகளில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் பயந்து கொண்டே உள்ள சூழல் ஏற்பட்டுள்ளது . ஒன்பதாவது பயிலும் மாணவன் கூட மது போதையில் பள்ளிகளுக்கு வரும் நிலையில் ஆசிரியர்கள் பயத்துடனே பள்ளிக்கு வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் வேதனையுடன் தெரிவித்தார்.





















