பிரபல ரவுடியை விடுவிக்க கோரி குடும்பத்தினர் தற்கொலை முயற்சி - சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
சேலம் நீதிமன்றம் சென்று திரும்பிய போது அஸ்தம்பட்டி பகுதியில் கோழி பாஸ்கரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி கோழி பாஸ்கர் (43). இவரது சகோதரர் ராஜா ஆகியோர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. இந்த நிலையில், கொலை வழக்கில் தலைமறைவாக இருந்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டில் காவல்துறையினர் கைது செய்தனர். அந்த வழக்கில் கோழி பாஸ்கர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெளியே வந்த நிலையில், நேற்றைய தினம் மற்றொரு வளத்திற்காக சேலம் நீதிமன்றம் சென்று திரும்பிய போது அஸ்தம்பட்டி பகுதியில் கோழி பாஸ்கரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.
இந்த நிலையில் கோழி பாஸ்கரின் மனைவி உஷா, மகள்கள், தாய் மகாலட்சுமி, சகோதரி லதா உள்பட அவரது குடும்பத்தினர் 7 பேர் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென்று அவர்கள் 7 பேரும் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். ஆனால் காவல் நிலையத்திற்கு வர முடியாது என்று மறுத்ததால் காவல்துறையினர் வலுகட்டாயமாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கோழி பாஸ்கரின் சகோதரி கூறுகையில், “எனது தம்பியை தொடர்ச்சியாக காவல்துறையினர் பல்வேறு வழக்குகளில் கைது செய்து வருகின்றனர். அவருக்கு திருந்துவதற்கான வாய்ப்பினை காவல்துறையினர் ஏற்படுத்தித் தரவில்லை. தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதால் எங்களது வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை யாரும் திருமணம் செய்ய வருவதில்லை. ரவுடி குடும்பத்தில் எப்படி பெண் எடுப்பது என்று கூறுகின்றனர். அரசும் காவல்துறையினரும் ஒரு முறை திரும்பி வாழ அனுமதித்தால் எனது சகோதரன் எந்த குற்ற செயலிலும் ஈடுபடாமல் இருப்பான்” என்று கூறினார்.
ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி கோழி பாஸ்கர் கைது செய்யப்பட்டபோது, இதேபோன்று இவரது குடும்பத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்