Salem Day 2024: சேலம் இன்று 159-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது - சிறப்புகள் தெரியுமா..?
சேலம் மாவட்டம் முதலில் சைலம் என்று அழைக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சைலம் என்றால் மலைகளால் சூழ்ந்த வாழ்விடம் என்று பொருள். அதுவே நாள் போக்கில் சேலம் என்று மாறி உள்ளது.
சேலம் மாவட்டம் இன்று 158 ஆண்டுகள் கடந்து 159 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழகத்திலேயே சென்னை, கோவை, மதுரை, திருச்சிக்கு அடுத்து 5-வது பெரிய மாவட்டமாக சேலம் உள்ளது. சேலம் மாவட்டத்தின் சிறப்புகள் குறித்து பார்ப்போம்.
சேலம் மாவட்டத்தின் சிறப்புகள்:
சேலம் மாவட்டம் முதலில் சைலம் என்று அழைக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சைலம் என்றால் மலைகளால் சூழ்ந்த வாழ்விடம் என்று பொருள். அதுவே நாள் போக்கில் சேலம் என்று மாறி உள்ளது. இதற்கான எந்தவித ஆதாரங்கள், கல்வெட்டுக்கள் இல்லை. சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது 'மாம்பழம்' எனவே இதற்கும் 'மாங்கனி நகரம்' என்ற பெயரும் உண்டு. தற்போது, சேலத்தில் இரும்பு உருக்கு ஆலை அமைந்துள்ளதால் இதற்கு 'ஸ்டீல் சிட்டி' என்றும் கூறுவர்.
பெருமைகள்:
சேலம் மாவட்டத்தில் விளையும் 'மல்கோவா மாம்பழம்' மிகவும் சிறப்பு வாய்ந்தது. 1937 இல் இந்தியாவிலேயே முதல்முறையாக மதுவிலக்கு அமல்படுத்தியது சேலம் மாவட்டத்தில்தான். சேலம் ரயில்வே ஜங்ஷன் நடைமேடை இந்தியாவிலேயே மிக நீளமான நடைமேடையாகும். சேலம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்குவது கைத்தறி, ஜவ்வரிசி உற்பத்தி, வெள்ளி கொலுசுகள் ஆகும். இதுமட்டுமின்றி, மரவள்ளிக்கிழங்கு, பூக்கள், பழங்கள் என பல விவசாய தொழில்களும் உண்டு. ஏற்றுமதியை பொறுத்தவரை ஜவ்வரிசி, பட்டு ஆடைகள், பூ வகைகள், வெள்ளி கொலுசுகள், தேங்காய் நார் கயிறுகள் என பலவகையான பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. சேலம் மாவட்டம் 'லீ பஜார்' கடைத் தெருவானது மிகவும் சிறப்பு வாய்ந்தது வணிக சந்தையாகும். இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று சந்தை நடைபெறும், அதில் மளிகை பொருட்கள் மொத்தமாக ஏலத்தில் விடப்பட்டு சேலம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் என பல மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
வழிபாட்டுத் தலங்களில் மிகவும் பழமையான இடங்கள் உண்டு. குறிப்பாக, உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ள முத்துமலை முருகன் கோவில், கோட்டை மாரியம்மன் திருக்கோவில், கோட்டை அழகிரிநாதர் திருக்கோவில், தாரமங்கலம் சிவன் கோவில், திப்பு சுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட், குழந்தைகள் ஏசு பேராலயம், அயோத்தியாபட்டணம் ராமர் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், எருமாபாளையம் ராமானுஜர் மடம் சிறப்புவாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் ஆகும். நீர்நிலைகள் என்று பார்த்தால் காவிரி ஆறு தனது மிக நீண்ட பயணத்தின் ஒரு பகுதி சேலம் மாவட்டத்தில் பாய்ந்து ஓடுகிறது. இது தவிர கஞ்ச மலையில் உருவாகும் திருமணிமுத்தாறு சேலம் மாவட்டம் முழுவதும் பாய்ந்தோடும் ஆறாகும்.
கஞ்சமலை, தீர்த்தலை ஆகிய மலையில் இரும்புத்தாது உள்ளது. கஞ்சமலையில் உள்ள இரும்புத்தாது எளிதில் வெட்டியெடுக்கும்படி அமைந்துள்ளது. இம்மலையில் சுமார் 45 கோடி டன் எடையுள்ள இரும்புத் தாது உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து எடுக்கக்கூடிய இரும்புத்தாதுவின் அளவு 304 மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சேர்வராயன் மலைப் பகுதியில் அலுமினியம் தயாரிப்பதற்கு அவசியமான பாக்சைட் என்ற தாது அதிக அளவில் கிடைக்கின்றது.
சுற்றுலா தலங்களை பொருத்தவரை சேலம் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு, டெல்டா விவசாயிகளின் தாயாக விளங்கும் மேட்டூர் அணை மற்றும் பூங்கா, ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா ஆகும். இத்தனை பெருமைகளை தனக்குள் அடங்கி இருக்கும் சேலம் மாவட்டத்திற்கு இன்று 159-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.