![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள்.. விவரம் இதுதான்
சேலம் மாநகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலை, குடிநீர், வடிநீர் கால்வாய் மற்றும் சுகாதாரம் தொடர்பான புகார்களை 8300062992 அல்லது 8300383003 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள்.. விவரம் இதுதான் Salem Corporation has published contact numbers for public to file complaints. சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள்.. விவரம் இதுதான்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/16/b899b7702749ce8e31b894ceb9c53d921689528384789113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாநகர பகுதியான அம்மாபேட்டை, ஜோதி டாக்கீஸ் பிரதான சாலையை சீர்மிகு சாலையாக ரூ.9.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணியை அமைச்சர் பார்வையிட்டார். மேலும், அம்மாபேட்டை பகுதியில் உள்ள அய்யாசாமி பூங்காவில் 15 இலட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மீதமுள்ள பணிகள் நிறைவடையும் என்றும், இதன் மூலம் சேலம் மாநகராட்சியில் உள்ள 34,35,39 மற்றும் 40 ஆகிய கோட்டங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு தினசரி குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
நான்கு கோட்டங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் பொதுமக்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து, ரூ.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மூக்கனேரி புனரமைப்புப் பணிகளையும் அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். இந்த ஏரியில் பொதுமக்களுக்கான நடைபாதை அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஓராண்டிற்குள் நிறைவடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் தரமாக செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பின்னர், சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளையும், நகர்ப்புற சுகாதார செவிலியர்களுக்கு தாய் சேய் நல கண்காணிப்பு பெட்டகங்களையும் வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை தீர்வு காணும் வகையில் வாட்ஸ் அப் எண்களை அமைச்சர் கே.என் நேரு வெளியிட்டார். அதன்படி சேலம் மாநகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலை, குடிநீர், வடிநீர் கால்வாய் மற்றும் சுகாதாரம் தொடர்பான புகார்களை 8300062992 அல்லது 8300383003 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகளை பெரிய அளவில் தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்காக டெல்லியில் உள்ள தொழில் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்மூலம் தூய்மை பணியாளர்களது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த சம்பள தொகை, ஓய்வுப்பெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை என கடந்த மாதம் ரூ.3.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி வளர்ச்சித் திட்டங்களுக்காக கடந்த 2 ஆண்டுகளில் ரூ.884 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் சாலை வசதிக்காக மட்டும் ரூ.103 கோடி வழங்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.548 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டத்துக்கு விரைவில் பணிகள் துவங்கப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கு, நலவாரிய அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை, கழிவுநீர் அகற்றும் வாகனங்களை இயக்குபவர்களுக்கு உரிமம், தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், பிறப்பு, இறப்பு பதிவாளர்களுக்கான கணினி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன. சேலம் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
தொடர்ந்து, ரேஷன் கடை விற்பனையாளராக பணியாற்றி, கொரோனா தொற்றினால் உயிரிழந்த தனலட்சுமி என்பவரின் வாரிசுகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சத்துக்கான காசோலையினை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)