சேலம்: காவிரியில் வெள்ளப்பெருக்கு; பூலாம்பட்டி படகுத்துறை இடிந்து விழுந்தது
காவிரி ஆற்றின் கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள நடைமேடையானது, வெள்ளப்பெருக்கால் 150 அடி தூரம் திடீரென இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் உள்ள விசைப்படகு தளம் இடிந்து விழுந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் நடப்பாண்டில் மேட்டூர் அணை 2 வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக உபரி நீராக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், காவிரி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி அடுத்துள்ள பூலாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள காவிரி கதவணை நீர்தேக்க நிலையத்தில் சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள நெருஞ்சிப்பேட்டையை இணைக்கும் வகையில் நீர்வழி விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. விசைப்படகு பயணிகள் பயன்படுத்தும் வகையில் பூலாம்பட்டி பகுதியில் படகுத்துறை அருகே காவிரி ஆற்றின் கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள நடைமேடையானது, வெள்ளப்பெருக்கால் 150 அடி தூரம் திடீரென இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.
மேலும் அதன் அருகில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் பயண சீட்டு விற்குமிடம் உள்ளிட்டவை அபாயகரமான நிலையில் உள்ளது. திடீரென நடைமேடை சரிந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர், நல்வாய்ப்பாக அப்பகுதியில் ஏற்கனவே உள்ளாட்சி நிர்வாகம் தடைகளை அமைத்திருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் காவிரியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில், இப்பகுதியில் பாதிப்பு அதிகரிக்க கூடும் என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக அப்பகுதியை பார்வையிட்டு சேதத்தை சரி செய்வதுடன் மேலும் இப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, சரபங்கா நதியின் முகத்துவார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு மலையிலிருந்து உருவாகும் சரபங்கா நதி, ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி மற்றும் எடப்பாடி வழியாக பாய்ந்து, காவிரியில் சங்கமிக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வரும் நிலையில், சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் நீர்வழிப் பாதைகளில் பல்வேறு இடங்களில், முட்பூதர்களும், ஆகாயத்தாமரை செடிகளும் அதிக அளவில் மண்டி கிடப்பதால், வெள்ளப்பெருக்கு காலங்களில் ஆற்றில் பாய்ந்து வரும் உபரி நீர் வெளியேற முடியாமல் அருகில் உள்ள குடியிருப்புகளில் சூழ்ந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எடப்பாடி அருகே உள்ள க.புதூர் அரசு பள்ளி பின்புறம் மற்றும் அரசு நூல் நிலைய குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை நீருடன், சாயக்கழிவு நீரும் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்பதால் அப்பகுதியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதேபோல் சரபங்கா நதியை அருகே உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள நைனாம்பட்டி பகுதியில் பல வீடுகள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இப்பகுதியில் ஆய்வு செய்து இங்கு தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் நகராட்சி அதிகாரிகளும் சரப்பாங்க ஆற்றில் கரையோர பகுதியில் உள்ள மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தொடர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.