சேலம்: குப்பையில் வீசப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பேட்டரி வாகனங்கள்..
வாகனங்கள் மாநகராட்சி பகுதியில் உள்ள விதிகள் தோறும் சென்று வீடுகளில் இருக்கக் கூடிய மக்கும் மற்றும் மக்களை பெற்று அதனை தரம்பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வந்தது.
சேலம் மாநகராட்சியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 200 பேட்டரி வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் தற்போது மண்ணோடு மண்ணாாகி வருகிறது. இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியும் சேர்க்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மாதிரி சாலைகள், திருமணிமுத்தாறு புனரமைப்பு, நவீன பேருந்து நிலையங்கள், நவீன சாலைகள் , ஏரிகள், நீர் நிலைகள் போன்ற உள்கட்டமைப்புகளுக்காக சேலம் மாநகராட்சிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது.
இந்த மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து சேகரிப்பதற்காக பேட்டரியால் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. கடந்த 8.9.2018 ஆம் தேதி அன்று, இந்த வாகனங்களை இயக்கி பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தினார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த பேட்டரி வாகனங்கள் அனைத்தும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.
சேலத்தைச் சேர்ந்த அருண் இந்தியன் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 179 வாகனங்களை கொள்முதல் செய்திருக்கிறது சேலம் மாநகராட்சி. ஒரு வாகனத்தின் விலை 1.80 லட்சம் ரூபாய் என்ற அளவில் மொத்தம் 3.22 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் மாநகராட்சி பகுதியில் உள்ள விதிகள் தோறும் சென்று வீடுகளில் இருக்கக் கூடிய மக்கும் மற்றும் மக்களை பெற்று அதனை தரம்பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது அந்த வாகனங்கள் அனைத்தும் செயல்படாமல் சிதிலமடைந்து கிடக்கிறது.
இந்த வாகனங்கள் உடைந்தும், பேட்டரிகள் செயலிழந்து, சேலம் மாநகராட்சியின் கீழ்த்தளத்தில் அலுவலக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 60 க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் சேலம் மாநகர் பல்வேறு பகுதிகளில் இந்த வாகனங்கள் சாலையோரத்தில் குப்பை மேடுகளிலும் கிடப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே மாநகராட்சி முழுவதும் குப்பைகள் தேங்கி வருகிறது. இதனால் குடியிருப்புகளில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் கூட துப்புரவு பணியாளர்கள் குடியிருப்புகளில் இருக்கக்கூடிய குப்பைகளை அகற்ற மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே மீண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என துப்புரவு பணியாளர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.