கந்துவட்டி கொடுமை : சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 4 பேர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
மன வேதனை தாங்க முடியாமல் வாழ்வதை விட இறப்பதே மேல் என நினைத்து இன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தோம் என தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி சேர்ந்த இளங்கோவன் அவரது மனைவி ரமா பிரபா இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இன்று இளங்கோவன், ரமா பிரபா மற்றும் இரண்டு மகள்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த போது தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து நான்கு பேரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுத்து நிறுத்தி நீரை ஊற்றி அவர்கள் பிரச்சனை குறித்து கேட்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் இரண்டு சக்கர வாகனம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகவும் எனது மகளின் படிப்பிற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆறுமுகத்திடம் வட்டிக்கு பணம் வாங்கினோம். தொடர்ந்து வட்டியை கட்டி வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் சரிவர வட்டியை கட்ட முடியவில்லை. அசல் தொகையை கட்டிய பிறகும் வட்டித் தொகை கட்டவில்லை என்று ஆறுமுகம் மற்றும் அவரது மகன் நடேசன் ஆகியோர் வீட்டிற்கு வந்து அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு வீட்டிற்கு வந்து தனது பெண்ணை தகாத வார்த்தையில் மிரட்டினர். இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து எனது மகள் பிரியங்கா முதலமைச்சர் தனிப் பிரிவிற்கு இதுகுறித்து மனு அனுப்பினார். இதை அறிந்த அதிமுக பிரமுகர் ஆறுமுகம் மற்றும் அவரது மகன் நடேசன் ஆகியோர் வீட்டிற்கு வந்து முதலமைச்சரிடமே புகார் தெரிவிக்கிறாயா என கூறி மகளை அனுப்பிவை என்றும்தகாத வார்த்தையில் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மன வேதனை தாங்க முடியாமல் வாழ்வதை விட இறப்பதே மேல் என நினைத்து இன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தோம் என தெரிவித்தனர். இதனையடுத்து நகர காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்துவட்டி கொடுமையால் பெண்கள் உட்பட குடும்பத்தினர் நான்கு பேர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)