NEET Student Suicide: தொடரும் நீட் சோகம்... சேலம் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு முறை நீட் தேர்வு எழுதியபோது போதிய மதிப்பெண் கிடைக்காத நிலையில், அப்போதும் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சேலம் மாநகர் சூரமங்கலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கௌதம் என்ற மாணவன் நீட் தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்று தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இதற்கு முன்பு 2023 முதல் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியிருந்தார். ஆனால் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால், தற்போது நடந்த நீட்தேர்வை மூன்றாவது முறையாக கௌதம் எழுதியிருந்தார். இந்த தேர்வையும் கௌதம் சரியாக எழுதவில்லை என தெரிகிறது. இதனால் கௌதம் கடந்த சில நாட்களாக வீட்டில் சோகமாக இருந்து வந்துள்ளார்.
கௌதமனின் தாயார் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீட்டில் பெற்றோர் இல்லாதபோது நேற்று இரவு கௌதம் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் மாணவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குறிப்பாக, கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு முறை நீட் தேர்வு எழுதியபோது போதிய மதிப்பெண் கிடைக்காத நிலையில், அப்போதும் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பாக இரண்டு முறை தற்கொலைக்கு முயன்ற கௌதமை பெற்றோர் மீட்டுள்ளனர். மாணவன் கௌதமுக்கு மன அழுத்தம் அதிகளவில் இருந்த நிலையில் மருத்துவ சிகிச்சையிலும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நிலையில் கௌதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீட்தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)





















