கரூர் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கு இரண்டாவது முறை நோட்டீஸ்; பாஜக புகாரில் நடவடிக்கை!
கரூரில் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் நடந்த சாலை மறியலின் போது நடந்த சம்பவம் குறித்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கரூரில் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் நடந்த சாலை மறியலின் போது நடந்த சம்பவம் குறித்து, விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வருகையின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்காத, அப்போதைய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து கடந்த ஜனவரி 10 ல், பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் கரூர் திண்ணப்பா கார்னர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சி நிர்வாகிகள் சென்றனர். ஆனால், திண்ணப்பா கார்னர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த கரூர் டவுன் டி.எஸ்.பி., தேவராஜ், இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் அனுமதி மறுத்தனர். அப்போது போலீசாருக்கும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால், போலீசாரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பட்டியல் இன மக்களை இழிவு படுத்தியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மீது, மாநில பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி துணைத் தலைவர் தலித் பாண்டியன், புது டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கரூரில் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி நிர்வாகிகள் நடத்திய சாலை மறியலின் போது, நடந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதினைந்து நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 6- ல் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விளக்கம் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால், கரூரில் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி நிர்வாகிகள் நடத்திய சாலை மறியலில் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இரண்டாவது முறையாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கரூரில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணியின் சார்பாக சாலை மறியலில் நடந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் இரண்டாவது முறையாக வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.