"நடப்போம் நலம் பெறுவோம்" திட்டம் - சேலத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சேலத்தில் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தை துவக்கி வைத்து திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நடைபயிற்சி மேற்கொண்டவாறு பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் "நடக்கும் நலம் பெறுவோம்" திட்டத்தின் கீழ் எட்டு கிலோமீட்டர் தூரம் தேர்வு செய்யப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான இடங்களை தேர்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரில் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அஸ்தம்பட்டி பகுதியில் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேலத்தில் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தை துவக்கி வைத்து திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நடைபயிற்சி மேற்கொண்டவாறு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து துவங்கிய நடைபயிற்சி சேலம் நீதிமன்றம், மத்திய சிறை, கோரிமேடு வழியாக கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள மார்டன் தியேட்டர்ஸ் வரை 4 கி.மீ தூரம் சென்று அங்கிருந்து மீண்டும் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் நிறைவு பெற்றது. பின்னர் அஸ்தம்பட்டி சிறை காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். மருத்துவ முகாமில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் உள்ளிட்டோர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், காடையாம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து காடையாம்பட்டி, சரக்கப்பிள்ளையூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க உள்ளார். பின்னர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளோம் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு படித்து முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி போராட்ட உள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.