அதிமுக கொண்டு வந்த மிதிவண்டி வழங்கும் திட்டம் நல்ல திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு
திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை, தொடர்ந்து அதிமுக செய்வார்களா? என்றால் கேள்விக்குறி தான்.
சேலம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் 181 பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் 26,199 மாணவ, மாணவிகளுக்கு ரூ.12.63 கோடியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சேலம் மாநகர் நான்கு ரோடு பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 10 பள்ளிகளை சேர்ந்த 1,232 மாணவர்கள், 1410 மாணவிகள் என 2,642 மாணவ மாணவிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். குறிப்பாக கடந்த கல்வியாண்டில் சேலம் மாவட்டத்தில் 21,979 மாணவ, மாணவிகளுக்கு ரூ.10.58 கோடியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "1989 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக வருவதற்கு, முன்பாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்கள். அப்போது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக பேருந்து பயணம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன்படி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அரசாணை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவச பேருந்து பயணம் செய்ய இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போதே பள்ளி மாணவர்கள் விரைவாக பள்ளிக்கு சென்று வரவேண்டும் என்பதால் முறையான பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது நாங்களும் அனைவரும் பேருந்து வசதிகளை ஏற்படுத்தி கொடுத்ததாக கூறினார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், நல்ல திட்டம் என்பதால் தொடர்ந்து திமுக ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். ஆனால் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை, தொடர்ந்து செய்வார்களா? என்றால் கேள்விக்குறி தான்” என்றுதெரிவித்தார்.
தொடந்து பேசிய அமைச்சர், “சகலகலா வல்லவர் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம். மிகவும் சிறப்பாக அனைவரையும் அரவணைத்து செல்வதில் வல்லவராக உள்ளார். அவர் ஏற்கனவே முதன்மை கல்வி அலுவலராக இருந்து, மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்றவர். இவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மாணவர்கள் படிக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும், வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து விட்டு, வீடு திரும்பும் வரை கவனமாக செல்ல வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.