விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் தள்ளுபடியை முதல்வர் செய்துள்ளார் - கே.என்.நேரு
கூட்டுறவு வங்கி என்பது மக்களின் நிறுவனம், இதை கட்டிக் காக்க வேண்டும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கேட்டுக்கொண்டார்.
சேலம் மாநகர் அழகாபுரம் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு மண்டபத்தில் 70 வது அனைந்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 2004 பயனாளிகளுக்கு 33.99 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்குகிறார்.
இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் 1996 ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறையின் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தபோது விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக இரத்து செய்வோம் என்று ரூ.7,500 கோடியை முழுமையாக இரத்து செய்தார். 1996 முதல் 2001 காலகட்டத்தில் விவசாயிகளுக்கு கடன்களை வழங்கியதோடு 600 க்கும் மேற்பட்ட தொடங்க வேளாண்மை கூட்டுறவுச் வங்கிகளுக்கும், 12,500 நியாய விலைக் கடைகளுக்கும், 3 மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அதேபோல், தற்போது தமிழகத்தில் விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் தள்ளுபடியை தமிழக முதல்வர் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய கடன் தொகைகளை நபார்டு வங்கிகளில் இருந்து 9 சதவீதத்திற்குக் கடனாகப் பெற்று, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 1,500 வங்கிகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன்பெற வேண்டுமென்றால், வங்கி அதிகாரிகளை சந்தித்து பெறுவது சிரமமாகும். ஆனால் முதலில் பணத்தை தந்துவிட்டு, பின்னர் பெற்றுக்கொள்ளும் சங்கமாக கூட்டுறவு விவசாய கடன் சங்கங்கள் தான் திகழ்ந்து வருகிறது. மீதமுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரசிடமிருந்து நிதியினைப் பெற்று செயல்பட்டு வருகிறது. மேலும் 126 நகர வங்கிகளும், 70 நில வள வங்கிகள், 23 மத்திய வங்கிகளும், ஒரு மாநில வங்கியும் செயல்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகச் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற உள்ளூரில் உள்ள செயலாளர் மூலம் உறுதி செய்தவுடன், கடன் வழங்கப்படுவதால் விவசாயிகள் எளிதாக கடன் பெற முடிகிறது. விவசாயிகள், சிறு வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்துத்தரப்பினரும் பயனடையும் துறையாக கூட்டுறவுத் துறை விளங்குகிறது. தமிழக முழுவதும் 47,000 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. இதன் செயலாளர்கள், தலைவர்கள் தேர்தெடுக்கப்பட்டு மக்களுக்கு உதவும் சங்கமாக கூட்டுறவு சங்கம் விளங்கி வருகிறது என்றார். கூட்டுறவு வங்கி என்பது பொதுமக்களின் வங்கி அரசின் பங்கு மிகவும் குறைவு, அனைத்து மக்களுக்கும் செயலாற்றுகின்ற வங்கி கூட்டுறவு வங்கி தான் எனவும் பேசினார். மேலும் கூட்டுறவு வங்கி என்பது மக்களின் நிறுவனம், இதை கட்டிக் காக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.