பென்னாகரம் பார்முலாவை சேலத்தில் பயன்படுத்த உள்ளேன் - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
எனக்கு சீட் கொடுத்தால் மட்டுமே திமுக வெற்றி பெறும். இல்லாவிட்டால் வெற்றி பெறாது என்று கூறுபவர்கள் திமுகவில் இருந்தால் அது புற்றுநோய் போன்றது என்றும் கூறினார்.

சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்தக் கூட்டத்தின் நோக்கம் 2026இல் மீண்டும் திமுக ஆட்சி மலர வேண்டும் என்பதுதான் நோக்கம். ஊர் கூடி தேர் இழுப்பது போன்று 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அத்தனைபேரின் ஒத்துழைப்புடன் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அனைவரின் உழைப்பை தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக கூறினார்.

திமுக பகுத்தறிவு இயக்கம். பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒவ்வொரு தலைமுறையாக செயல்பட்டார்கள். தமிழர்கள் சுயமரியாதையாக வாழ வேண்டும் என்பதற்கு எத்தனையோ இலக்குகள் உள்ளது. அதற்கு ஐந்தாவது தலைமுறைதான் சனாதனத்தை ஒழிப்போம் என்ற ஒற்றை வரியில் செயல்படும் தலைவர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் என்று கூறினார்.
கோஷ்டி மனப்பான்மை ஒழிக்க வேண்டும்; கோஷ்டி இருக்கிறது என்றால் அது திமுகவிற்கு புற்றுநோய் போன்று. எனக்கு சீட் கொடுத்தால் மட்டுமே திமுக வெற்றி பெறும்; இல்லாவிட்டால் வெற்றி பெறாது என்று கூறுபவர்கள் திமுகவில் இருந்தால் அது புற்றுநோய் போன்றது. யாருக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று முதல்வருக்கு தெரியாதா அவருக்கு அனைத்தும் தெரியும் என்றார்.
திமுகவில் உள்ள அனைவருக்கும் என்ன உணர்வு இருக்கவேண்டும் என்றாலும், போட்டி மனப்பான்மை இருக்கவே கூடாது; முதல்வர் யாரை கை நீட்டுகிறாரோ அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இன்றுடன் கோஷ்டி மனப்பான்மை சேலத்தில் இல்லவே இல்லை என்று கூறினால் நிச்சயம் சேலம் வெற்றி பெறும். இன்றுடன் திமுக வெற்றியே என்ற எண்ணத்துடன் பணியாற்ற வேண்டும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சி அமைக்க வேண்டும்; அதிமுக எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம். திமுகவின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக சேலம் மாவட்டத்தில் இருக்கும்போது பொறுப்பு நமக்கு அதிகமாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும்போது, சொந்த மாவட்டத்தில் வெற்றி பெறவிட்டால் பக்கத்து மாவட்டம் கூட மதிக்காது என்று எண்ணுவார் அதனால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார்.

தேர்தல் என்பது ரகசியம்; ரகசியம் மட்டுமே தேர்தல் வெற்றிக்கு அடிப்படையாக அமையும். ஆட்சியுடைய சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்; ஆனால் ஆர்வக்கோளாறில் இல்லாதவற்றையெல்லாம் சொல்லக்கூடாது. அதை எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்றும் பேசினார்.
பென்னாகரத்தின் ஃபார்முலாவை தான் சேலத்திற்கு பயன்படுத்த போகிறேன். ஜெயலலிதா எப்பொழுதுமே ஒரு நாள் மட்டுமே சுற்றுப்பயணம் செய்வார். ஆனால் பென்னாகரத்தில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக மூன்றரை நாள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இருப்பினும் டெபாசிட்டை அதிமுக இழந்தது என்பதுதான் வரலாறு. தேர்தல்கள் நடத்தபோது என்னுடைய புகைப்படமும் பெயரும், இடம் பெறாது என்பதுதான் என்னுடைய ரகசியம் என்றார்.
பென்னாகரத்தில் எவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டதோ, அந்த பார்முலாவை தான் சேலத்திலும் பயன்படுத்த போகிறேன். அவ்வாறு பயன்படுத்தும்போது 11 சட்டமன்றத் தொகுதியையும் திமுக வெற்றி பெறும். நம்முடைய ஒற்றுமை தான் முக்கியம்; யாரும் யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது. தேர்தல் தொடர்பான தகவல்களை பரப்புவது நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.
சேலம் மாவட்ட செயலாளர்கள் மூவரும் 3 பேஸ் கரண்டு போல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அனைத்தையும் செய்யமுடியும். ஒரு பேஸ் போய்விட்டாலும் எதுவும் செய்ய முடியாது. ஏதாவது கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறிவிட்டால். உடனடியாக வந்து நிற்கிறேன் என்று கூறினார்.
வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாக சேர்ந்து திமுக சாதனை பிரசுரங்களை வீடு வீடாக சென்று கொடுக்க வேண்டும். வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் வாக்குச்சாவடி முகவர்கள் தான் மனசு வைக்க வேண்டும். எங்கள் ஊரில் இன்று வரை வாக்குச்சாவடி முகவராக நான்தான் செயல்பட்டு வருகிறேன். எனவே திமுகவில் வலுவான வாக்குச்சாவடி முகவர்களை உருவாக்க வேண்டும் என்றும் பேசினார்.
சிறுசிறு கருத்து வேறுபாடு அனைத்து கட்சிகளும் இருக்கிறது; நம் கட்சியில் மட்டுமில்லை. தனிப்பட்ட பிரச்சனைகள், பதவி பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை தள்ளி வைத்துவிட்டு, தனிப்பட்டமுறையில் கடிதம் மூலமாக என்னிடம் பேசலாம். அதை பொதுவெளியில் கருத்து கூறினால் அது கட்சிக்கு தவறாக மாறிவிடும் என்றும் அறிவுரை கூறினார்.





















