(Source: Poll of Polls)
‘படிச்சிட்டு வாங்க வேலை தயாரா இருக்கு’ - மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர் சி.வி.கணேசன்
கடந்த கல்வி ஆண்டில் தொழிற்கல்வி பயின்ற 2700 பேரில் 2310 பேருக்கு வேலை வாய்ப்புக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெருமிதம்.
சேலம் மாநகர் அய்யந்திருமாளிகை பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் ரூ. 33 கோடி மதிப்பில் புதிதாக நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஆய்வகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரோபோடிக்ஸ் ஆய்வகம் லேசர் கட்டிங் ஆய்வகம் உள்ளிட்ட ஆய்வகங்களை பார்வையிட்டார். மேலும் மாணவர்கள் விபரம், மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள் குறித்த விபரம் ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்து தொழிற்பயிற்சி நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் சி.வி கணேசன், "படித்துவிட்டு வேலை இல்லை என்கிற நிலையை மாற்றவே முதல்வர் அவர்கள் 4.0 தரமான தொழிற்பயிற்சி மற்றும் திறன் கொடுக்க வேண்டும் என தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்தி வருகிறோம். இதற்காக முதல்வர் ரூ. 2877 கோடி நிதி ஒதுக்கி 71 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன தொழிற்பயிற்சி கூடங்கள் அமைத்துள்ளார். கடந்த கல்வி ஆண்டில் தொழிற்கல்வி பயின்ற 2700 பேரில் 2310 பேருக்கு வேலை வாய்ப்புக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது தொழிற்பயிற்சி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வேலை தயாராக உள்ளது. படித்து முடித்தவுடன் அனைவருக்கும் வேலை கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
இதனை தொடர்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற தேர்வுகளில் கடந்த 2021-2022 ஆண்டு நடத்தப்பட்ட 9 வகுப்புகளில் கலந்து கொண்ட 720 மாணவர்களில் 60 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2022-2023 ஆண்டு நடத்தப்பட்ட 16 வகுப்புகளில் கலந்து கொண்ட 1,197 மாணவர்களில் 131 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2023-2024 ஆண்டு நடத்தப்பட்ட 12 வகுப்புகளில் கலந்து கொண்ட 502 மாணவர்களில் 220 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2024 ஆண்டு இதுவரை நடத்தப்பட்ட 5 வகுப்புகளில் கலந்து கொண்ட 460 மாணவர்களில் 9 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட 42 வகுப்புகளில் கலந்து கொண்ட 2,879 மாணவர்களில் 420 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், சேலம் மண்டலத்தில் 531 மாணவர்களுக்கும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தவிர தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் 12,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கால்நடை உதவி மருத்துவருக்கான தேர்விற்கு இம்மையத்தில் இலவச பயிற்சி பெற்ற 151 நபர்களில் 131 நபர்கள் பணி நியமனம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியதாகும். விடா முயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு இருந்தால் போட்டி தேர்வுகளில் மாணவ, மாணவிகள் எளிதாக வெற்றி பெறலாம என தெரிவித்தார். முன்னதாக, சேலம் தளவாய்ப்பட்டி, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நோயாளிகள் பதிவு செய்யும் இடம், மருத்துவர் அறை, மருத்து வழங்கும் இடம், அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, படுக்கை வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்தும், மருந்தகத்தில் சிகிச்சைக்கு வருபவர்களிடம் உரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அங்கு சிகிச்சை பெற வந்திருந்த நபர்களிடம் மருத்துவமனையின் வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.