MetturDam : மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது! காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: புதிய அப்டேட்!
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,850 கனஅடியாக குறைந்துள்ளது, தற்போது மேட்டூர் அணையில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 56,997 கன அடியில் இருந்து 30,850 கன அடியாக குறைந்தது.,தற்போது மேட்டூர் அணையில் நீர் இருப்பு 93.74 டி.எம்.சி.யாக உள்ளது
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு
தென்மேற்கு பருவமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் ஜூன் 29ந்தேதி முதல் முறையாகவும், ஜூலை 5ந்தேதி 2வதுமுறையாகவும் ஜூலை 20 ந்தேதி 3வது முறையாகவும் ஜூலை 25ந்தேதி 4வது முறையாகவும் ஆகஸ்ட் 20ம் தேதி 5வது முறையாக மேட்டூர் அணை அடுத்தடுத்து நிரம்பியது. அதன் பிறகு மழை குறைந்த காரணத்தாலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடரந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர் மட்டம் மெல்ல குறையத்தொடங்கியது.
இந்நிலையில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகள், சினிபால்ஸ் உள்பட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டது. அதிகபட்சமாக சுமார் 90 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டதால் காவிரிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 56,997 கன அடியில் இருந்து 30,850 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கன அடிக்கு தண்ணீர் வெளியேற்றம். அணையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆக உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து காலை 10 மணி முதல் 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைப்பு.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது.
இதனால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை க்கும், கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது.
இந்த இரு அணைகளிலும் இருந்தும் நேற்று முன்தினம் வினாடிக்கு 55 ஆயிரத்து 450 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1 லட்சத்து 16 ஆயிரத்து 330 கனஅடி நீர் சென்ற நிலையில், நேற்று தண்ணீர் திறப்பு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது. இந்த தண்ணீர், கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வந்தது. பின்னர் படிபடியாக நீர்வரத்து குறைய தொடங்கியது. மாலை 4 மணி அளவில் 50 ஆயிரம் கனஅடியாக வந்தது.
அருவிக்கு செல்லும் பாதை பூட்டு
இதையடுத்து இன்றைய நிலவரப்படி நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 4-வது நாளாக மாவட்ட கலெக்டர் சதீஸ் தடை விதித்துள்ளார்.
இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கேட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றின் அழகை ரசிக்க மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.





















