தருமபுரி: பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட ஆடிப் பௌர்ணமி சிறப்பு பூஜை..!
ஆடிப் பௌர்ணமியை முன்னிட்டு பெரியாம்பட்டி, கடகத்தூர் கிராமத்தில் மாரியம்மன், பட்டாளம் அம்மனுக்கு திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம். பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து வழிபாடு.
தருமபுரி அருகே உள்ள கடகத்தூர் பகுதியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருவிழா கடந்த திங்கட்கிழமை முதல் நாள் நிகழ்ச்சியாக பட்டாளம்மனுக்கு பொங்கல் வைத்து கங்கை பூஜை செய்த பின்னர் பட்டாளம்மன் சாமி திருவீதி உலாவுடன் முதல் நாள் திருவிழா தொடங்கியது. நேற்று 9 ம் தேதி இரண்டாம் நாள் திருவிழாவாக ஸ்ரீ சக்தி மாரியம்மன் கூழ் ஊற்றுதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் வேப்பிலை கட்டி கூழ் குடத்தை தலையில் வைத்தவாறு மேளதாள மங்கல இசை முழங்க ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று கூழை படையல் இட்டு வழிபட்டனர். அதனை தொடர்ந்து இன்று பட்டாளம்மனுக்கு தேர் வீதி உலாவில், பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தின் போது, மயிலாட்டம், கரகாட்டம், கட்டக்கால், பொய்க்கால் குதிரை என பம்பை மேளதாளங்கள் முழங்க திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் கரகம் எடுத்து கொண்டும், அம்மன் வேடமிட்டும் ஊர்வலமாக வந்தனர். இந்த விழாவின் ஏற்பாடுகளை ஊர் பிரமுகர்களான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் பாலு, திமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சேட்டு, அம்மன் பழனி, அனைத்து கோம்பு கவுண்டர்கள் காமராஜ், வேலன், பச்சையப்பன், மெய்ஞேனசுந்தரம், முருகேசன், சேகர், மற்றும் கடகத்தூர் இளைஞர் படை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதேபோல் பெரியாம்பட்டி கொரோனா பேரிடர் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. தொடர்ந்து இந்தாண்டு மகாசக்தி மாரியம்மன் திருவிழா 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இதில் மூன்று சமூக மக்கள் ஒன்றிணைந்து தேர் திருவிழாவை வெகு விமர்சியாக கொண்டாடினர். இந்த விழாவின் முக்கிய நாளான இன்று அம்மன் தேர் வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் தீச்சட்டி, கரகம் எடுத்து கொண்டும், பெண்கள் மாவிளக்கு எடுத்த ஊர்வலமாக வந்தனர். இதில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு, மஹா சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். இதில் பக்தி பாடல்களை பாடி, அம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபாட்டு. இந்த பூஜையில் ஆண்களை கோவில் உள்ளே அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விழாக்குழு சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்