கள்ளக்குறிச்சி: செம்மரம் கடத்தல் விவகாரத்தில் கடத்தப்பட்ட கூலித் தொழிலாளி மரணம் - போலிஸ் விசாரணை
’’கேட்ட தொகையை ராஜாவின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்துவந்த நிலையில் ராஜா தங்களிடமிருந்து தப்பிச் சென்று கிணற்றில் விழுந்து விட்டதாக மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார் தர்மராஜ்’’
சேலம் மாவட்டத்தில் மலை கிராம மக்களை செம்மரக்கட்டை கடத்துவதற்காக இடைத்தரகர்கள் மூலம் ஆந்திர மாநிலத்திற்கு கூலித் தொழிலாளிகளை அனுப்புவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் செம்மரம் வெட்ட சென்ற கூலித் தொழிலாளி ராஜா என்பவரின் சடலம் விவசாய கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு செம்மரம் வெட்டுவதற்காக ஆந்திர வனப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், சொந்த ஊர் திரும்பிய ராஜா தனது மனைவி பிரியாவுடன் நேற்று கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அருணா என்ற கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த எருக்கம்பட்டு பகுதியை சேர்ந்த கணேசன் மற்றும் சீனிவாசன் தந்திரமாக பேசி ராஜாவை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளனர். நீண்ட நேரம் ராஜா திரும்பி வராத நிலையில் அவரது குடும்பத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இந்த நிலையில் தர்மராஜ் என்பவர் ராஜாவின் மைத்துனர் சத்யராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ராஜாவை கடத்தி வைத்துள்ளதாகவும் தங்களுக்கு சொந்தமான சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை ராஜா திருடி ரூபாய் மூன்று லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டதாகவும் கூறிய தர்மராஜ் ரூபாய் 6 லட்சம் கொடுத்தால் ராஜாவை விடுப்பதாக சத்யராஜிடம் கூறியுள்ளார். மேலும் செம்மரம் வெட்டுபவர்கள் தங்களுக்கு கடவுள் போல எனவே ராஜாவை அடிக்க மாட்டோம் ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ரூபாய் 6 லட்சம் கொடுக்காவிட்டால் அறுத்து கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
தர்மராஜ் கேட்ட தொகையை ராஜாவின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்துவந்த நிலையில் ராஜா தங்களிடமிருந்து தப்பிச் சென்று கிணற்றில் விழுந்து விட்டதாக மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார் தர்மராஜ். அதிர்ச்சி அடைந்த ராஜாவின் குடும்பத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கிணற்றிலிருந்து ராஜாவை சடலமாக மீட்டனர். அதிர்ந்து போன ராஜாவின் மனைவி கடத்தல் கும்பல் தனது கணவரை கொலை செய்துவிட்டதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
முதற்கட்டமாக சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த திலீப் ஜீவா மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் தங்கள் பிடியில் இருந்த ராஜா தப்பிச்சென்று ஓடியதாகவும் அவரை பிடிக்க துரத்திச் சென்றபோது கிணற்றில் விழுந்து விட்டதாகவும் பிடிப்பட்ட நபர்கள் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள முக்கிய ஏஜென்ட் தர்மராஜ் உட்பட 5 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.