(Source: ECI/ABP News/ABP Majha)
TTV Dinakaran: "I.N.D.I.A கூட்டணியில் ஸ்டாலின் மட்டுமே மிஞ்சுவார்" - டிடிவி தினகரன்
சேலம் மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் இந்திய கூட்டணி வெற்றிபெறும் என்று கூறியிருந்தார். அவர் பேசிவிட்டு வீடு செல்வதற்குள் கூட்டணி சுக்குநூறாக உடைந்து வருகிறது.
சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "இந்திய கூட்டணியைப் பொறுத்தவரை ஒன்றுக்கொன்று முரணான நபர்கள் கூட்டணி அமைக்கும் போது தவளையும், எலியும் சேர்ந்து கூட்டணி அமைத்தது போன்றது. ஏற்கனவே மம்தா பானர்ஜி வெளியேறிவிட்டார்கள், அதன் பின்னர் கெஜ்ரிவால், நிதீஷ் குமார் உள்ளிட்டோர்கள் வெளியேறினார்கள். சேலம் மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் இந்திய கூட்டணி வெற்றிபெறும் என்று கூறியிருந்தார். அவர் பேசிவிட்டு வீடு செல்வதற்குள் கூட்டணி சுக்குநூறாக உடைந்து வருகிறது. I.N.D.I.A கூட்டணியில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே மிஞ்சுவார் என்று கருதுகிறேன்" என்றார்.
"இந்தியாவில் வாழ்கின்ற அனைவருக்கும் ராமர் கோவில் ஒரு நேஷனல் சென்டிமென்ட். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது. ராமர் கோவில் ஒரு ஆன்மீகமான விஷயம். எல்லோர் மனதையும் திருப்திப்படுத்துகின்ற, அனைவருகம் பெருமைப்படுகின்றதாக அமைந்துள்ளது. கடவுளை நம்புபவர்கள், இறைபக்தி உள்ளவர்கள் அனைவரும் அதை ஏற்றுக் கொள்வார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முறையாக கட்டப்பட்டுள்ளது. அயோத்தி கோவில் கட்டியவர்களுக்கு பெருமையான விஷயம். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்றால் நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகளில் தான் வெளிப்படும். ஊழல் இல்லாத ஆட்சியாக மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தொடர்ந்து ஆட்சிக்கு வரும் என்று பெரும்பான்மை மக்களுடைய எண்ணமாகவும் உள்ளது. மக்கள் எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் என்பது நாடாளுமன்ற தேர்தலில் தான் தெரியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற கூட்டணியில் இடம்பெறும் வகையில் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. முடிவான பிறகு வெளியிடப்படும்” என்று கூறினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை வெளிநாடு சென்று வருகிறார். இந்த முறை எவ்வாறு முதலீடு கவர்ந்து வருகிறார் என்பதை பார்ப்போம். எடப்பாடி பழனிசாமி துரோகமும் ஏமாற்று வேலை மட்டும்தான் தெரிந்த ஒரே அரசியல். சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்கை வாங்கிவிடலாம் என்று குல்லா போட்டுக்கொண்டு அலைந்து வருகிறார். சிறுபான்மை மக்கள் ஏமாறமாட்டார்கள். தமிழ்நாட்டு மக்களை இரட்டை இலை காட்டி ஏமாற்ற முடியாது என்று இந்த தேர்தலில் மக்கள் உணர்த்துவார்கள். மத்திய மாநில அரசுகள் ஒருவருக்கொருவர் சுமூகமாக செல்லவேண்டும். அதேபோன்று மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மாநிலங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செயல்படும் போது தான் ஒரு சமநிலையாக செயல்பட முடியும் என்றார். தமிழக ஆளுநர் மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பதாகத்தான் தெரிகிறது. ஆளுநர் பொறுப்பு என்பது முக்கியமான பதவி. அந்த பதிவிலுள்ளவர்கள் சரியாக நடந்து கொண்டால் தான், அந்த பதவிக்கும் அழகு. அவருக்கு நல்லது. நடிகர் விஜய் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது போன்று செயல்பட்டு வருவது குறித்த கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் யாருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் கட்சி நடத்துவதற்கும் உரிமை உள்ளது. அவர் கட்சி ஆரம்பித்தால் மக்கள் தான் கருத்து சொல்லவேண்டும். இன்னொரு அரசியல் கட்சி சொல்வது நல்லாக இருப்பது நாகரிகமாக இருக்காது. அவருடன் கூட்டணி குறித்து அவர் முதலில் கட்சி ஆரம்பித்து வரட்டும் அதைப் பற்றி பேசிக்கொள்ளலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பி இருந்த கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவேண்டும். அதை செய்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது. தற்போது பிரதமராக உள்ள மோடி மீண்டும் மக்கள் நினைத்தால் பிரதமராகுவார்” என்றார்.