Crime: என்கவுன்டருக்கு பயந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சேலம் நீதிமன்றத்தில் சரண்
தன் மீது பொய் வழக்கு பதிவு செய்ததுடன், என்கவுன்டர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கோர்ட்டில் அவர் கூறினார்.
சென்னை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், ஆவடி போன்ற பகுதிகளில் உள்ள ரவுடிகள் மீது காவல்துறையினர் கடந்த சில நாட்களாக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதிபயங்கர ரவுடிகள் மீது என்கவுன்டர் நடவடிக்கையும் காவல்துறை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ரவுடிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை காவல் துறையினர் என்கவுன்டர் செய்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் லெனின் (34). பிரபல ரவுடியான இவர் மீது 5 கொலை, 15க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, வழிப்பறி, அடி தடி வழக்குகள் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் பிரபாகரன் என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றதாக லெனின் உள்பட 8 பேர் மீது சோமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ரவுடி லெனின் உள்பட 4 பேரை சோமங்கலம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். கடந்த 5 மாதமாக தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளிகாக அறிவித்து தேடுகின்றனர். இந்நிலையில் சேலம் 4 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ரவுடி லெனின் சரண் அடைந்தார். தன் மீது பொய் வழக்கு பதிவு செய்ததுடன், என்கவுன்டர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கோர்ட்டில் அவர் கூறினார். விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் யுவராஜ். அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ரவுடி லெனின் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.